×

ஊரகப் பகுதிகளில் ரூ.224.57 கோடி மதிப்பீட்டில் 72 லட்சம் மரம் நடவு செய்யும் பணிகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


சென்னை : ஊரகப் பகுதிகளில் 2020-21 ஆம் ஆண்டில் பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ரூ.224.57 கோடி மதிப்பீட்டில் 72 லட்சம் மரம் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக மற்றும் ஊராட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (நவ. 4) சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் போன்ற நீர்நிலைகளைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பணிகளை விரைந்து முடிக்கவும், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் நிதியாண்டில் இதுவரை தூர்வாரப்படாத ஏரிகள், குளங்களைப் புனரமைக்க வேண்டும். வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரவும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2020-21 ஆம் ஆண்டுக்கு இதுவரை ரூ.5,802.37 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ரூ.3,786.05 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஊதியம் நிலுவை இன்றி ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிலாளர் வரவு, செலவுத் திட்டமான 27 கோடி மனித சக்தி நாட்களில் 20.35 கோடி மனித சக்தி நாட்கள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற்று வரும் பணிகளை அனைத்து அலுவலர்கள் நிலையிலும் தொடர்ச்சியாகக் கள ஆய்வு மேற்கொண்டு நல்ல தரத்துடன் குறித்த காலக்கெடுவுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

ஊரகப் பகுதிகளைப் பசுமைமயமாக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்தவும், காலியாக உள்ள அரசு நிலங்கள், தனியார் நிறுவனங்கள், பொது பூங்காக்கள் மற்றும் இதர பொருத்தமான இடங்களில் ரூ.224.57 கோடி மதிப்பீட்டில் 72 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகளை விரைந்து நடவு செய்ய வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் ரூ.14.08 கோடி மதிப்பீட்டில் 100 உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள், ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் 100 கதிர் அடிக்கும் களங்கள், விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு ரூ.41.03 கோடி மதிப்பீட்டில் 100 கிராம சந்தைகள் அமைக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊரகப் பகுதிகளில் உள்ள தனி நபர்கள் பயனடையும் வகையில் ரூ.872.87 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 800 மாட்டுக் கொட்டகைகளும், 21 ஆயிரத்து 200 ஆட்டுக் கொட்டகைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கூட்டுறவு பால் சங்கங்களுக்கு ரூ.30.54 கோடி மதிப்பீட்டில் 200 பால் சேகரிக்கும் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், பல்வேறு நிதி ஆதாரங்களைக் கொண்டு ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், அங்கன்வாடி மையங்கள், சிமெண்ட் கான்கிரீட் பாதைகள், சிமெண்ட் கான்கிரீட் வடிகால்கள், 2,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்டல் சாலைகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்துப் பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்..

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் நடப்பாண்டில் 20 ஆயிரம் வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை சுமார் 12 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் 20 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 12 ஆயிரம் வீடுகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் நடப்பாண்டில் 2 லட்சம் வீடுகள் ரூ.3,400 கோடி மதிப்பீட்டில் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு 74 ஆயிரம் வீடுகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வீடு கட்டும் திட்டப்பணிகளை அலுவலர்கள் விரைவுபடுத்தி பயனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தினை முடித்திட வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.900 கோடி மதிப்பீட்டிற்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி அளவுக்கு ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. பணி ஆணை வழங்கப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். மேலும், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.146.16 கோடி மதிப்பீட்டில் 506.37 கிலோ மீட்டர் நீளமுள்ள 261 சாலைப் பணிகள் எடுக்கப்பட்டு, அவற்றில் 63 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் நீடித்து மற்றும் நிலைத்து இருக்கக்கூடிய திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் படிப்படியாக அனைத்துக் கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும், 3 கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினைத் தினசரி அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் முறையாகச் செயல்படுத்திடவும், தூய்மைக் காவலர்கள் வருகை, திட்டச் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Tags : SB Velumani ,areas , Tree Planting, Works, Minister, S.P.Velumani
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்