×

கீழடி அகழாய்வு தளத்தை காண அனுமதிக்க வேண்டும்: பொதுமக்களை வலியுறுத்தல்

திருப்புவனம்: கீழடி அகழாய்வு தளம், கண்டறியப்பட்ட பொருட்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கீழடியில் இதுவரை 6 கட்டஙகளாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. 6ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரியில் துவங்கி செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவு பெற்றது. கீழடி 5ம் கட்ட அகழாய்வை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.

6ம் கட்ட ஆய்வில் கொரோனா காரணாமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 4ம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியானதில் 2600 ஆண்டுகளுக்கு முன் அறிவியில், விவசாயம், கட்டுமானம், செல்லப்பிராணி வளர்ப்பில் என நாகரிகமாகத்துடன் முன்னோடியாய் வாழ்ந்த தமிழ் இனம் குறித்த ஆவணங்களை நேரில் பார்வையிடவும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை காணவும் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்து சென்றனர். 6ம் கட்ட அகழாய்வில் எடை கற்கள், கருப்பு சிவப்பு பானைகள், இணைப்பு பானைகள், உறைகிணறுகள், எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிகள், மண்டை ஓடுகள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டிடத்தை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அதாவது 6ம் கட்ட அகழாய்வின் போது 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி கண்டறியப்பட்டது. எனவே 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானத்தையும் வெளியே எடுத்து இரண்டையும் இணைத்து முழுமையாக ஆவணப்படுத்தும் பணியில் தமிழக தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. இதனால் தினசரி பார்வையாளர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ராஜேஸ்வர் கூறுகையில், ‘கீழடி அகழாய்வு குறித்து டிவிக்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். வைகை நதி கரை நாகரிகம் குறித்து நேரில் பார்க்க வந்தேன். ஆனால் அகழாய்வு தளம் பார்வையிட அனுமதியில்லை என மூடி வைத்துள்ளனர். இதனை திறந்தால் இளைய தலைமுறையினர் கீழடி அகழாய்வை நேரில் கண்டு நாகரிக சமுதாயம் பற்றி அறிய முடியும். எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : public , Keeladi excavation site
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...