×

தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு: செங்கோட்டை, திருச்செந்தூர், விருதுநகர் ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணிகள் தொடங்குமா?

தூத்துக்குடி: தென்காசி - செங்கோட்டை, தென்காசி - திருச்செந்தூர், தென்காசி - விருதுநகர் ஆகிய மூன்று ரயில்வே வழித்தடங்களையும் மின்மயமாக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே துறையில் நாடு முழுவதும் பெரும்பாலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு விட்டன. ஆனால் தென் மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தென்காசியில் இருந்து கொல்லம், தென்காசியில் இருந்து விருதுநகர், தென்காசியில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் ஆகிய வழித்தடங்கள் இன்னமும் மின்மயமாக்கப்படவில்லை. இந்த வழித்தடங்களில் தற்போது வரை டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் விரைவான பயணம், சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்த்தல், செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில்வே வழித்தடங்கள் அனைத்தும் மின் மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது ரயில்வே நிர்வாகம் 985 கிலோ மீட்டர் தூரத்தை மின்மயம் ஆக்குவதற்காக 587.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 192 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின் மயமாக்கும் பணிகளை கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி எல் அன் டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பணிகளை 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் விருதுநகர் முதல் தென்காசி, தென்காசி முதல் செங்கோட்டை, தென்காசி முதல் திருநெல்வேலி, திருநெல்வேலி முதல் திருச்செந்தூர், விருதுநகர் முதல் மானாமதுரை, காரைக்குடி முதல் திருச்சி உள்ளிட்ட வழித்தடங்கள் அடங்கும்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 16 முதல் 18 மின்கம்பங்கள் அமைக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் விருதுநகர் முதல் மானாமதுரை வரையிலும் காரைக்குடி முதல் திருச்சி வரையிலும் மட்டுமே மின் பாதை அமைப்பதற்காக குழிகள் தோண்டுதல், மின்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தென்காசியில் இருந்து செங்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மூன்று வழித்தடங்களில் மின் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. விருதுநகர் முதல் தென்காசி வரை 130 கிமீ தொலைவிற்கும், தென்காசி முதல் திருநெல்வேலி வரை 72 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மின் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஒப்பந்தம் விடப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் இதற்கான வடிவமைப்பு பணிகள் கூட தொடங்காத காரணத்தால் தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் மின்பாதையாக மாற்றப்பட்டால் தென்காசியில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு சுமார் ஒரு மணி நேரம் பயண நேரத்தில் மிச்சப்படும். தற்போது தென்காசியில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் சர்வசாதாரணமாக 11 மணி 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. மின்மயமாக மாற்றப்படும் பொழுது 10 மணி 30 நிமிடங்களில் சென்னை சென்று விடலாம். செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது டீசல் இன்ஜின்கள் பொருத்தப்படுகிறது. இந்த டீசல் இன்ஜின்கள் மதுரை அல்லது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அகற்றப்பட்டு மின்சார ரயில் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்கிறது. மின் பாதையாக மாற்றும் பொழுது இந்த நேரம் மிச்சப்படும். எனவே உடனடியாக காலதாமதமின்றி தென்காசியில் இருந்து விருதுநகர் செங்கோட்டை திருச்செந்தூர் வழித்தடங்களில் மின் மயமாக்கும் பணிகள் துவக்க வேண்டும் என்று தென்காசி மற்றும் செங்கோட்டை பயணிகள் நல சங்கத்தினரும் ரயில் பயண ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : electrification work ,Southern District ,Virudhunagar ,Red Fort ,Thiruchendur , Rail, railway tracks
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...