உளுத்துக்குப்பை ஊராட்சியில் தண்ணீரின்றி வயல்கள் பாளம் பாளமாக வெடிப்பு

மயிலாடுதுறை: உளுத்துக்குப்பை ஊராட்சியில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகிறது. வயல்கள் பாளம், பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சி பனம்பள்ளி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் உளுத்துக்குப்பை-மொழையூர் பாசன வாய்க்காலை நம்பி 50 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாய்க்கால் முறையாக தூர் வாரப்படாமலும், ஆக்ரமிப்புகளாலும் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பாசன வாய்க்காலை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகாமையில் உள்ள பூவேந்தன் வாய்க்காலில் செல்லும் தண்ணீரை மடை அடைத்தும், வாடகைக்கு போர்வெல் கொண்டுவந்து வாய்க்காலில் இருந்து நீண்ட தூரத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்றும் சம்பா நடவு செய்துள்ளனர். தற்போது சம்பா நடவு செய்து 30 நாட்கள் ஆன நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் வளர்ந்து வரும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. வயல்கள் வறட்சியால் பாளம் பாளமாக வெடிக்க துவங்கியுள்ளதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பொதுப்பணித்துறையினர் முறையாக பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடாததால் தங்கள் பயிர்கள் கருகி வருவதாகவும் உடனடியாக பூவேந்தன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக தண்ணீர் வராத உளுத்துக்குப்பை-மொழையூர் பாசன வாய்க்காலில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>