ஆதித்யநாத் அறிவிப்பு எதிரொலி.. மத்தியப்பிரதேசம், ஹரியானாவைத் தொடர்ந்து திருமணத்திற்கான மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்ற கர்நாடகா அரசு முடிவு!!

பெங்களூரு : உத்தரப்பிரதேச அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்ததையடுத்து, மத்தியப்பிரதேச அரசும், ஹரியானா  அரசும் அதேபோன்று சட்டம் இயற்றப்போவதாகத் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகா அரசும் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்ப்படும் என்று அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை வேறொரு மதத்தை சேர்ந்த நபர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த பிறகு அந்த பெண்ணை கட்டாயம் மதமாற்றம் செய்வது லவ் ஜிஹாத் என்று சொல்லப்படுகிறது. சமீபகாலமாக லவ் ஜிஹாத் விவகாரம் பெரிதாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பல மாநிலங்கள் சட்டம் இயற்ற முன்வந்துள்ளது. அண்மையில் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: காதல் பெயரில் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வருகிறோம். இதை (லவ் ஜிஹாத்) நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் நடைமுறையை தொடங்கியுள்ளோம். இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும், என்றார்.

இந்த நிலையில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க விரைவில் கர்நாடக அரசு சட்டம் கொண்டுவரும் என்று மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்.கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி. ரவி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மாநிலத்தின் பெண்களின் மரியாதை குலைக்கும் வகையில் ஜிகாதிகள் செய்யும்போது, அதைப் பார்த்து அரசு மவுனமாக இருக்காது. யாரேனும் இதுபோன்ற மதம்மாற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விரைவில் வழங்கப்படும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதே போன்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், லவ் ஜிஹாத் சில காலமாக இங்கு உள்ளது.  இது ஒரு சமூக தீமை. இதனை தோற்கடிக்க ஒரு சட்டம் இயற்றுவது குறித்து மாநில அரசு யோசித்து வருகிறது. எனவே, உ.பி., ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதையும், எங்கள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளையும்  நாங்கள் ஆராய்வோம்.அந்த இரண்டு முடிவுகளின் அடிப்படையில், முடிவு  எடுப்போம், என்று தெரிவித்தார்.

Related Stories:

>