திமுக பிரமுகர்கள் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்கு வலை

திருத்தணி: திருத்தணியில் திமுக பிரமுகர்கள் 2 பேரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர். திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருத்தணி இளைஞரணி அமைப்பாளராக உள்ள மா.கிரண் (35) முக்கிய இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதி வந்ததை நேரடியாக கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று கிரணும் திருத்தணி நகர பொருளாளர் ஷியாம் சுந்தர் (50 இருவரும் அரக்கோணம் சாலையில் உள்ள சுவர் விளம்பரங்களை பார்த்தவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

உழவர் சந்தை அருகே வந்தபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கிரணை தலை கால், பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்து உடனிருந்த ஷியாம் சுந்தர் தடுக்க முயன்ற போது அவரையும் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு, அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த திருத்தணி போலீஸ் டிஎஸ்பி குணசேகர், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எதனால், யார் வெட்டினர் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் தனியார் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இதனால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>