எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்... கேப்டன் வார்னர் உற்சாகம்

ஷார்ஜா: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை கடைசி லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டுத் தாக்கிய சன்ரைசர்ஸ், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அந்த அணியின் போலார்டு 41, சூரியகுமார் 36 ரன் எடுத்தனர். ஐதராபாத்தின் சந்தீப் 3, ஹோல்டர், நதீம் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய ஐதராபாத், தொடக்க வீரர்களின் அதிரடியால் 17.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 151 ரன் எடுத்து வென்றது. அந்த அணியின் கேப்டன் வார்னர் 85* ரன் (58பந்து, 10பவுண்டரி, 1சிக்சர்), விருத்திமான் சாஹா 58* ரன்னுடன் (45பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ், பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்தது. அதிலும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால்தான் ‘பிளே ஆப்’ என்ற நிலையில் ஐதராபாத் இருந்தது. ஆனால் மும்பைக்கு எதிரான வெற்றியின் மூலம் 3வது இடத்துக்கு முன்னேறியதும் ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல் முறை.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அணியை மண்ணை கவ்வ வைத்த சாதனையும் நிகழ்ந்தது. மேலும் அதிகமுறை பிளேஆப்/நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் ஐதராபாத் 3வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

அந்தப்பட்டியலில் 8முறை முன்னேறிய சென்னை முதல் இடத்திலும், 6 முறை முன்னேறிய மும்பை 2வது இடத்திலும், தொடர்ச்சியாக 5முறை முன்னேறிய ஐதராபாத் 3வது இடத்திலும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல ஐதராபாத் கடைசியாக மோதிய 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றதுள்ளது. அதாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய 3 அணிகளையும் ஐதராபாத் கடைசியாக மோதிய 3 போட்டிகளிலும் வீழ்த்தியது. டெல்லியை 88 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரை 5 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.  

கூடவே ஐதராபாத்தின் வெற்றி, ரன்ரேட் அடிப்படையில் பின்தங்கியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்சின் கனவை கலைத்துவிட்டது. வெற்றிக்குப் பிறகு பேசிய வார்னர், ‘பஞ்சாப் உடனான பயங்கர தோல்விக்கு பிறகு இப்போது நன்றாக உணர்கிறேன். இந்த வெற்றியில் பந்து வீச்சாளர்களின் பங்கு பெரிது. நதீம் (ஆட்ட நாயகன்) நன்றாக வீசினார். நாங்கள் எப்போதும் சிறப்பாக முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறோம். அந்த உத்வேகம் அணியின் உரிமையாளர்களிடம் இருந்து பெற்றது. அவர்கள் பெரிய மனிதர்கள். எங்கள் அணியை ஒரு குடும்பம் போல் நடத்துகின்றனர். எப்போதும் குறை காணாத மனப்பான்மையுடன் ஒவ்வொரு விளையாட்டையும் அணுகுகிறோம். எனது அணியை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதில் பெருமிதம் கொள்கிறேன். அப்படி செய்வது என் வேலை, என் கடமை. நான் எப்போதும் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற சவாலுக்கு உற்சாகமாக காத்திருக்கிறேன்’ என்றார்.

Related Stories:

>