×

முதல் குவாலிபயர் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் பலப்பரீட்சை

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல்  குவாலிபயர் போட்டியில் நடப்பு சாம்பியன்  மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் களம் காணுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடர், பரபரப்பான ‘பிளே ஆப்’ கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், தகுதிச் சுற்றுக்கு முதலாவதாக முன்னேறிய அணி, அதிக வெற்றிகளை பெற்ற அணி, அதிக  புள்ளிகளை பெற்ற அணி, அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி என பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் படைத்திருக்கிறது.

அந்த அணி 9வது முறையாகவும், டெல்லி 5வது முறையாகவும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்புத் தொடரில் இந்த இரு அணிகளும் ஆரம்பம் முதலே முதல் 2 இடங்களுக்கு போட்டி போட்டன. புள்ளிப்பட்டியலில் மாறி, மாறி முதலிடம் பிடித்தன. லீக் சுற்றின் முடிவிலும் இந்த 2 அணிகள்தான் முதல் 2 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஆனால், 2 லீக் போட்டிகளிலும் மும்பைதான் வெற்றி வாகை சூடியுள்ளது. அக்.11ல் நடந்த முதல் லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், அக்.31ல் நடந்த 2வது லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் டெல்லியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 26 ஆட்டங்களில் மும்பை 14 முறையும், டெல்லி 12 முறையும் வென்றுள்ளன. அந்த உற்சாகத்துடன் இன்று டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. காயம் காரணமாக  அணியில் இருந்து விலகியிருந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.  கூடவே எவர்கிரீன் அதிரடி ஆட்டக்காரர் போலார்டு, இஷான் கிஷன், பூம்ரா, பாண்டியா சகோதரர்கள், டிரென்ட் போல்ட் என அணியில் உள்ள பலரும் வெற்றிக்கு கை கொடுப்பார்கள். அதே நேரத்தில் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் டெல்லி இன்று மும்பையை எதிர்கொள்ள இருக்கிறது.

பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத், மும்பை ஆகிய அணிகளிடம் தொடர்ந்து தோல்விக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் வீரர்கள் உற்சாகமாகவே இருக்கின்றனர். தவான், ரஹானே, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், ஸ்டாய்னிஸ் என யாராவது அவ்வப்போது பேட்டிங்கில் அசத்தி அணியை கரை சேர்ப்பது வாடிக்கையாக இருக்கிறது. கூடவே நடப்புத் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி ‘ஊதா தொப்பி’யை வைத்திருக்கும் காகிசோ ரபாடா டெல்லி அணியின் பெரும்பலம். ரன்களை வாரி வழங்காமல் துல்லியமாகப் பந்துவீசும் ஆர்.அஷ்வின், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அசத்தும் அன்ரிச் நார்ட்ஜ், அக்சர் படேல் என பந்து வீச்சிலும் டெல்லி பலமாகவே இருக்கிறது. இப்படி இரு அணிகளும்  சம பலத்துடனேயே இன்று முதல் குவாலிபயர் ஆட்டத்தில் களம் காண இருக்கின்றன. வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும். மற்ற அணி 2வது குவாலிபயர் போட்டிக்காக காத்திருக்க வேண்டும்.

Tags : Delhi Capitals ,qualifier ,Mumbai Indians , The Delhi Capitals will take on the Mumbai Indians in the first qualifier today
× RELATED ஐபிஎல் போட்டிகளுக்கான 2ம் கட்ட அட்டவணை...