சிஏ தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், சிஏ படிப்புக்களுக்கான தேர்வுகள் வரும் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடக்கஉள்ளது. இந்நிலையில், இத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், ‘ மத்திய அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஐசிஏஐ வெளியிடவில்லை. இது போன்ற தேர்வை நடத்துவது ஒரு கல்வி நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்யும் மத்திய அரசின் வழிகாட்டுதல் விதிமுறையை மீறும் செயலாகும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

இது, நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐசிஏஐ தரப்பில், ‘சிஏ தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது. இது, தேர்வர்களின் பகுப்பாய்வு திறன்களை சோதிக்கும் தேர்வாகும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் இருக்கும். விளக்கமான பதில்களை அளிக்க வேண்டி இருக்கும். மேலும், இது குறியீடு இடுவது போன்ற கேள்விகளை உள்ளடக்கியது கிடையாது. எனவே, சிஏ தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது,” என  வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து,‘ மாணவர்களின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்,’ என கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: