×

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிரம்ப்-பிடென் இடையே இழுபறி: 5 மாகாணங்களில் கடும் போட்டி

* 10 கோடி தபால் வாக்குகள் குவிந்ததால் முடிவு அறிவிப்பதில் தாமதம்

வாஷிங்டன்: உலகமே உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வரலாறு காணாத இழுபறி நிலை நீடிக்கிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஜோ பிடென் இடையே கடுமையான போட்டி நிலவுவதாலும், முன்கூட்டியே 10 கோடி பேர் வாக்களித்ததாலும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பென்சில்வேனியா, வட கரோலினா உள்ளிட்ட 5 முக்கிய மாகாணங்களில் இழுபறி நீடிப்பதால், யாருக்கு வெற்றி என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆளக்கூடிய புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாளியை சேர்ந்த கமலா ஹாரிசும் களமிறங்கி உள்ளனர். தபால் ஓட்டு மற்றும் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி, தேர்தல் தினத்திற்கு முன்பே 10 கோடி பேர் தபால் மூலம் வாக்களித்தனர். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நேரடி வாக்குப்பதிவு தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. பல மாகாணங்களில் கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சுமார் 6 கோடி பேர் நேரடியாக வாக்களித்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு கிட்டத்தட்ட 16 கோடியாக, 67 சதவீதமாக சாதனை படைக்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமாக வாக்குப்பதிவு நடந்ததில்லை. வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வழக்கமாக வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் அதிகாலையில், இந்திய நேரப்படி  11 மணி அளவில் முடிவுகள் தெரிந்து விடும். ஆனால், இம்முறை டிரம்ப் -  பிடென் இடையே கடுமையான போட்டி நிலவியதால், முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்பட்டது. பல கருத்துக் கணிப்புகளும் பிடென் வெற்றி பெறுவார் என கூறியிருந்த நிலையில், அதற்கேற்ப ஆரம்பத்திலேயே அவர் பல மாகாணங்களை தன்வசப்படுத்தினார்.
குறிப்பாக, அதிபரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழு (எலெக்டோரல் காலேஜ்) வாக்குகள் அதிகமுள்ள மாகாணங்கள் பிடேன் வசமானது. 55 வாக்காளர் குழு  வாக்குகளை கொண்ட கலிபோர்னியா, 29 வாக்குகளை கொண்ட நியூயார்க், 10 வாக்குகளை கொண்ட மினசோட்டா, 11 வாக்குகளை கொண்ட அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் பிடென் வெற்றி பெற்றார். இதில், அரிசோனா மாகாணத்தில் கடந்த 2016ல் டிரம்ப் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல், 38 வாக்காளர் குழு வாக்குகளை கொண்ட டெக்சாஸ், 29 வாக்குகளை கொண்ட புளோரிடா, 6 வாக்குகளை கொண்ட அயோவா உள்ளிட்ட மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றினார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்த வரையில், மக்கள் வாக்குகள் மூலம் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள இந்த வாக்காளர் குழு வாக்குகள் மூலமே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில், மொத்தமுள்ள 538 வாக்காளர் குழு வாக்குகளில் 270 வாக்குகளை பெறுபவர் அதிபராக அறிவிக்கப்படுவார். இதன்படி, இந்திய நேரப்படி நேற்று காலை, பிடெனின் இந்த வாக்குகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தன. 200 வாக்காளர் குழு வாக்குகளை பிடென் பெற்ற நிலையில், டிரம்ப் 115 வாக்குகளையே பெற்றிருந்தார். ஆனால், அடுத்தடுத்த மாகாண முடிவுகள் டிரம்ப்புக்கு ஆதரவானதால் இடைவெளி குறைந்தது.

நேரடி வாக்குகளுக்கு பிறகு தபால் மற்றும் முன்கூட்டிய வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதில் 10 கோடி வாக்குகள் இருப்பதால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பிடென் 6 கோடி 95 லட்சத்து 41 ஆயிரத்து 353 வாக்குகளுடன் 50.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். டிரம்ப் 6 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 070 வாக்குகளுடன் 48.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதிபரை தீர்மானிக்கக் கூடிய பென்சில்வேனியா, வட கரோலினா, விஸ்கான்சின், ஜார்ஜியா, மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, தான் வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்த வேண்டும் எனவும், இதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட போவதாகவும் கூறி பீதியை கிளப்பினார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டது.

நேற்றிரவு வரையிலான வாக்கு எண்ணிக்கை முடிவில், பிடென் 238 வாக்காளர் குழு வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 213 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிய வர உலகம் இன்னும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடென் வென்ற மாகாணங்கள்
* கலிபோர்னியா (55)
* நியூயார்க் (29)
* இல்லினாய்ஸ் (20)
* நியூ ஜெர்சி (14)
* வெர்ஜீனியா (13)
* வாஷிங்டன் (12)
* அரிசோனா (11)
* மாசசூசெட்ஸ் (11)
* மேரிலாந்து (10)
* மினசோட்டா (10)
* கொலராடோ (9)
* கனெக்டிகட் (7)
* ஒரேகான் (7)
* நியூ மெக்சிகோ (5)
* ஹவாய் (4)
* ரோட் தீவு (4)
* நியூ ஹாம்ப்ஷயர் (4)
* மைனே (3)
* டெலோவர் (3)
* வெர்மான்ட் (3)
* கொலம்பியா மாவட்டம் (3)
* நெப்ராஸ்கா (1)

டிரம்ப் வென்ற மாகாணங்கள் அதிபரை தேர்வு செய்யும் வாக்காளர் குழு வாக்குகள் அடைப்பு குறிக்குள் தரப்பட்டுள்ளன.
* டெக்சாஸ் (38)
* புளோரிடா (29)
* ஒஹியோ (18)
* இண்டியானா (11)
* டென்னசி (11)
* மிசவுரி (10)
* அலபாமா (9)
* தெற்கு கரோலினா (9)
* கென்டக்கி (8)
* லூசியானா (8)
* ஓக்லஹோமா (7)
* ஆர்கன்சாஸ் (6)
* இடாஹோ (4)
* உட்டா (6)
* அயோவா (6)
* கன்சாஸ் (6)
* மிசிசிப்பி (6)
* மேற்கு வெர்ஜீனியா (5)
* நெப்ராஸ்கா (4)
* வடக்கு டகோட்டா (3)
* மொன்டானா (3)
* தெற்கு டகோட்டா (3)
* வயோமிங் (3)


Tags : election ,U.S. ,Trump-Biden ,provinces , U.S. presidential election vote count drags on between Trump-Biden: fierce competition in 5 provinces
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...