×

எம்.சாண்ட் குவாரி மூலம் ஆற்றுமணல் அள்ளிய விவகாரம்: மணல் கொள்ளை தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை?அறிக்ைக கேட்கிறது ஐகோர்ட் கிளை

மதுரை: எம்.சாண்ட் குவாரிக்கான அனுமதி பெற்று ஆற்றுமணல் அள்ளிய விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து அறிக்கையளிக்க  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: எங்கள் கிராமத்தில், எம்.சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று, அதிகளவில் ஆற்றுமணல் அள்ளப்பட்டுள்ளது. புகாரின்பேரில் பூமி எம்.சாண்ட் நிறுவனத்திற்கு 9.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது வரை எம்.சாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்படவில்லை.

இவர், ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர். இந்த முறைகேட்டில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதனால், போலீசார் முறையாக விசாரணை நடத்த வாய்ப்பில்லை. எனவே, இந்த மணல் திருட்டு முறைகேடு வழக்கை கல்லிடைக்குறிச்சி போலீசில் இருந்து சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். நீதிபதிகள், ‘‘மணல் கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் நிலை என்ன? புகாரின் மீதான முகாந்திரம் என்ன? வழக்கு பதிந்தும், முக்கிய குற்றவாளிகளை இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை. இவர்களை கைது செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை’’ என்றனர். பின்னர், வழக்கு தொடர்பான முழு விவரங்களையும்,  ஆவணங்களையும் இன்ஸ்பெக்டர் அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு. விசாரணையை நவ. 18க்கு தள்ளிவைத்தனர்.


Tags : M.Sand Quarry , River sand dumping case by M.Sand Quarry: How many cases have been registered in connection with sand robbery?
× RELATED கோவையில் 2 வது நாளாக தொடர்கிறது எஸ்.பி....