×

அண்ணா பல்கலைக்கழகம் செலுத்த வலியுறுத்தும் தேர்வு கட்டணம் ரத்து கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடக்கோரி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சௌந்தர்யா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம், தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு  முடிகளையும் வெளியிட வேண்டும். தேர்விற்காக செலவிடப்பட்ட தொகையை விவரங்களுடன் தெரிவிக்க வேண்டுமென்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, தேர்வு நடைமுறைகளுக்கான செலவினங்கள் குறித்த விவரங்களை அண்ணா  பல்கலைகழக பதிவாளர் கருணாமூர்த்தி பதில் மனுவாக தாக்கல் செய்தார்.

அதில், ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும்  ஒரு மாணவர் 9 பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும். அதன்படி இந்த செமஸ்டர் தேர்வு 4 லட்சம் மாணவர்கள் என்ற அடிப்படையில் 37 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில் கணக்கிட்டு கட்டணம் அறிவிக்கப்பட்டது.  கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பதற்கான ஊதியம், ஆய்வக செலவுகள், இணையதள இணைப்பு, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுக்கு ஒரு தேர்வுக்கு ரூ. 150 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் செலவை தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டன. அதன்படி   ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு தற்போது  126 ரூபாய் 10 பைசா செலவாகியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.  

இக்கட்டணத்தை திருப்பி செலுத்த  உத்தரவிட்டால் நிதி சுமையை ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, பதில் மனுவில் முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றார். இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : cancellation ,hearing ,Anna University , Case for cancellation of exam fees demanded by Anna University: Adjournment of hearing
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...