×

நெல்லையில் பெரும் பரபரப்பு: சிகரெட் புகைத்த தகராறில்பாஜ நிர்வாகி மீது துப்பாக்கி சூடு: முன்னாள் ராணுவ வீரர், மகனுடன் கைது

நெல்லை: சிகரெட் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் பாஜ நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர், அவரது மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பாளை. பெருமாள்புரம் தாமஸ் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஜெபமணி (70). முன்னாள் ராணுவ வீரர். இவர் கராத்தே செல்வினின் அண்ணன் ஆவார். தற்போது வங்கி செக்யூரிட்டியாக இருந்து வருகிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பெரியதுரை (34) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. பெரியதுரை பெருமாள்புரத்தில் கறிக்கடை வைத்துள்ளார். மேலும் பாஜ மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

நேற்று காலை பெரியதுரை, அவரது தந்தை லட்சுமணனுக்கு சொந்தமான இடத்தில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெபமணி, ‘‘இங்கே நின்று கொண்டு எப்படி சிகரெட் பிடிக்கலாம்? என்று கேட்டு தகராறு செய்தார். அதற்கு பெரியதுரை எங்கள் இடம், நான் சிகரெட் பிடிக்கிறேன். உங்களுக்கு என்ன வந்தது? என்று கேட்டதாக தெரிகிறது. தகராறு முற்றவே ஜெபமணி தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெரியதுரையை நோக்கி திடீரென சுட்டார். இதில் அவரது கையில் குண்டு பாய்ந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளை பெருமாள்புரம் போலீசார் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி, அவரது மகன் சர்ச்சில் ஆகிய இருவரையும் கைது செய்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து பெரியதுரை கூறுகையில், ‘‘ஜெபமணி என் நெஞ்சை குறி வைத்துதான் சுட்டார். நான் சுதாரித்துக் கொண்டு குனிந்ததால் குண்டு என்னுடைய கையில் பட்டது.’’ என்றார். தகவலறிந்த பாஜவினர் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர், ‘‘குற்றம் சாட்டப்பட்டவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விட்டோம். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். எல்லாம் சட்டப்படி நடைபெறும்’’ என்றார். இதையடுத்து பாஜவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : executive ,Nellai ,BJP , Great excitement in rice, cigarettes smoked firing takararilpaja admin on: ex-soldier, son arrested
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...