ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு; டிச. 2க்குள் விசாரணையை முடிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பான விசாரணையை டிச. 2ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை வழக்குபதிவு செய்தன. இந்நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் முன் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின்  கூறுகையில், ‘இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிடம் இருந்து சில கடிதங்கள் வருவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.

முன்னதாக சிபிஐ தரப்பில் சில தகவல்களை வேண்டி, இவ்வழக்கு விவகாரம் தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில், சில முன்னேற்றங்களும்  ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை  மற்றும் சிபிஐ நிலை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன’ என்றார். அதற்கு நீதிபதி அஜய் குமார் குஹார், வழக்கின் விசாரணையை டிச. 2ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று, சிபிஐ மற்றும்  அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Related Stories:

>