அதி நவீன திரவ பிராணவாயு கலன்: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்புக்கு முன்பாக 34 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இருந்த திரவ ஆக்ஸிஜன் மொத்த கொள்ளளவு 355.1 கிலோ லிட்டர் ஆகும். இந்த கொள்ளளவை மேலும் 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூடுதலாக 30 புதிய ஆக்ஸிஜன் கொள்கலன்கள் பல்வேறு அளவுகளில் கொள்முதல் செய்யப்பட்டு 413.5 கிலோ லிட்டர் அளவுக்கு உயர்த்தி, அதன்மூலம் மொத்த கொள்ளளவு 834 கிலோ லிட்டர் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 70 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புதிய சேமிப்பு கலன்கள் மற்றும் ஏற்கனவே இருந்த குறைந்த சேமிப்பு கலன்களுக்கு பதிலாக உயர் கொள்ளளவு சேமிப்பு கலன்கள் ரூ. 11 கோடி செலவில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வருகிறது.

திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவை உயர்த்துவதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த 6,000 லிட்டர் கொள்ளளவு கலனுக்கு பதிலாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலேயே மிக உயர்ந்த கொள்ளளவான 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன திரவ பிராணவாயு கலனை 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவி, நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி, ஆக்ஸிஜன் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் இன்று 8 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>