×

உலகுக்கு உப்பளந்த தமிழர்கள்!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாக்குக்கு உணர்த்தியாய் பழமொழி கண்டுபிடித்து வைத்திருக்கும் கூட்டம் நாம். உலக அளவில் உப்பைக் கண்டுபிடித்து அதை உற்பத்தி செய்து உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து கல்லா கட்டிய பழங்கால சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா? யெஸ்! அது உண்மைதான். கடலும் கடல் சார்ந்த பகுதியையும் நெய்தல் எனச் சொல்லும் நம் மரபு, அந்தப் பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உப்புக் காய்ச்சும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தோம். சங்க இலக்கியங்கள் உமணர் எனப்படும் உப்பு வியாபாரிகள், உப்புத் தொழில் செய்வோர் பற்றி பல நூறு குறிப்புகள் உள்ளன. உலக அளவில் தமிழர்கள், கிரேக்கர்கள், சீனர்கள் ஆகியோர்தான் பல ஆயிரம் ஆண்டுகளாய் உப்புத் தொழில் நுட்பம் அறிந்தவர்களாய் இருக்கிறோம். உலக வரலாற்றையே மாற்றிய பெருமை உப்புக்கு உண்டு. பல போர்கள் உப்பினாலேயே அதன் வணிகத்தினாலேயே நடைபெற்றிருக்கின்றன. பண்டமாற்று முறையில் காசுக்குப் பதிலாக உப்பைக் கொடுத்து வாங்கும் பழக்கமும் இங்கு இருந்துள்ளது. இப்போதுகூட நம் பண்பாட்டில் உப்பு என்பது லட்சுமி அதாவது செல்வம் என்றே போற்றப்படுகிறது. உப்பைக் கொடுத்து தங்கம், தந்தம், தோல், மிளகு, சர்க்கரை, கோலா கொட்டைகள், மணிகள் போன்றவை மட்டுமல்ல அடிமைகளைக்கூட வாங்கியிருக்கிறார்கள். இப்படி, அடிமையாக வாங்கியவர்களை உப்பளங்களில் பணிக்கு அமர்த்தி உப்பு உற்பத்தியை அதிகரித்திருக்கிறார்கள். மார்க்கோ போலோ எழுதிய வரலாற்றுக் குறிப்பில் பேரரசர் முகம் பதிக்கப்பட்ட உப்புக் கட்டிகள் அமோல் என்ற நாணயமாக பயன்படுத்தப்
பட்டது என்கிறது. பிற்காலத்தில் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு உப்பை செலவாணியாகக் கொடுப்பது நின்றுபோனது.

அப்படியும் ஒருசிலர் உப்பைக் கொடுத்து வாங்க முயன்றபோதுதான் ‘உப்புப் பெறாத விஷயம்’ என்ற சொலவடை தோன்றியது. எனினும் ஒரு சில இடங்களில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை இந்த உப்பு செலவாணி நடந்துகொண்டுதான் இருந்தது. 1812ல் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே உரிமைக்கான போர் நடந்தபோது பிரிட்டன் அமெரிக்காவுக்குச் செல்லும் உப்புவரத்தை நிறுத்த உணவைப் பதப்படுத்த முடியாமல் அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதே போல் பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மக்கள் மேல் விதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான உப்பு வரியும் இருந்தது. வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் உப்புக்கு இருந்த முக்கியத்துவத்தை காந்தியார் உணர்ந்ததால்தான் தண்டி யாத்திரை மூலம் சுதந்திரப் போராட்டத்தை வலுவாக்கினார். பிரிட்டனின் உப்பு வணிகத்தைப் பாதிக்கும் வகையில் நாமே உப்பு தயாரிக்கப் போகிறோம் என்று அறிவித்தார். சம்பா நெல்லையும் உப்பையும் கூலியாகக் கொடுக்கும் வழக்கமே சம்பளம் என்ற சொல்லாக மாறியது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். லத்தீன் மொழியில் சலேரியம் என்ற சொல்லுக்கு உப்பு என்று பொருள். உப்பை சம்பளமாகக் கொடுப்பதால்தான் அதற்கு Salary என்ற பெயரே வந்தது!

Tags : Tamils ,world , World, prosperous Tamils
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!