×

பனங்கிழங்கில் சாக்லேட் அல்வா பால்கோவா... ஒரு தமிழாசிரியரின் அசத்தல் முயற்சி!!

நன்றி குங்குமம்

பொதுவாக, பனை மரத்திலிருந்து பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி; பனை ஓலையிலிருந்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் இப்படித்தான் பார்த்திருப்போம். ஆனால், பனையிலிருந்து விளையும் பனங்கிழங்கில் சாக்லேட், அல்வா,  பால்கோவா, பால்பேடா எல்லாம் கேள்விப்பட்டிருப்போமா? வேதாரண்யம் தாலுகாவிலிருந்து இந்தப் பனைப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் தமிழாசிரியரான கார்த்திகேயன். இந்தியாவில் பனங்கிழங்கிலிருந்து சாக்லேட்டும், அல்வாவும், பால்கோவாவும் தயார் செய்து இதுவரை யாரும் விற்பனை செய்ததில்லை. இவரே முன்னோடி. ‘‘சொந்த ஊர் வேதாரண்யம் வட்டத்துல இருக்குற ஆயக்காரன்புலம் கிராமம். நான் தமிழ்ல எம்.ஏ, பி.எட் முடிச்சிருக்கேன். இங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழாசிரியரா பணி செய்திட்டு இருக்கேன்...’’ சின்ன அறிமுகத் துடன் பேசத் தொடங்கினார் கார்த்திகேயன். ‘‘எங்க வயல்வெளியில் பனை மரம் அதிகம். வரப்பு முழுவதும் பனை மரங்கள்தான். அதிலிருந்து விதைகளை எடுத்து பனங்கிழங்கு உற்பத்தி செய்வோம். ஒரு பனை மரம் 250 காய்களைக் காய்க்கும். அதிலிருந்து 600 பனை விதைகள் கிடைக்கும். அதாவது அறுநூறு பனங்கிழங்கு உற்பத்தி பண்ணலாம். அப்படி பனங்கிழங்கு உற்பத்தி செய்து விற்கும்போது ஒரு ரூபாய்க்குப் போக வேண்டிய கிழங்கை வியாபாரிகள் 50 பைசாவுக்கும், 30 பைசாவுக்கும் கேட்டாங்க. எங்களுக்கு கட்டுப்படியாகல. ஆண்டுக்கு ஒருமுறைதான் கிழங்கு கிடைக்கும். எங்க வீட்டுத் தோட்டத்துல ஆண்டுக்கு 8 ஆயிரத்துல இருந்து பத்தாயிரம் கிழங்கு வரை விளையும். அதனால, ஏன் இவ்வளவு குறைவான விலைக்கு கொடுக்கணும்னு இதுக்கு மாற்றுவழி யோசிச்சேன். முக்கியமா, பனங்கிழங்குக்கு மதிப்பு கூட்டலாம்னு நினைச்சேன். அதனால, பனங்கிழங்குல வேற ஏதாவது பண்ணணும்னு தீர்மானிச்சேன். முதல்ல உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் மாதிரி போட்டுப் பார்த்தேன். அது கசப்புத் தன்மையைக் கொடுத்துச்சு. இதைப் போக்க வினிகர் சேர்க்கிறது, எலுமிச்சஞ்சாறு சேர்க்குறதுனு வேறு முயற்சிகள் செய்தேன்.

எதுவும் செட்டாகல. என்ன பண்றதுனு புரியல. அதேநேரம் முயற்சியையும் கைவிடல.  அடுத்து, நாங்க சின்ன வயசா இருக்கும்போது எங்க பாட்டி இந்தப் பனங்கிழங்கை வேக வைச்சு காய வைப்பாங்க. அப்புறம், அதை துருவி வெல்லத்தை சேர்த்து தருவாங்க. அது சுவையா இருக்கும். அதுமாதிரியும் செய்து பார்த்தேன். ஆனா, அது ரெண்டு நாட்கள் வச்சு சாப்பிடற மாதிரிதான் இருந்துச்சு. அப்புறம், வெல்லத்தைப் பாகு மாதிரி காய்ச்சி முயற்சி செய்தேன். அதுவும் சரியா வரல. பிறகு, கிழங்கை காய வச்சு அரைச்சு மாவாக்கிப் பண்ணலாம்னு முயற்சித்தேன். இப்பதான் சரியான வடிவம் கிடைச்சது. கிட்டத்தட்ட 17வது வடிவமாதான் பர்பி கிடைச்சது...’’ என்கிறவர் உற்சாகமாகத் தொடர்ந்தார். ‘‘பனங்கிழங்ைகப் பொடியாக்கி மாவு போல ரெடி பண்ணி கடந்த நாலு ஆண்டுகளா பர்பி செய்றேன். அதாவது, மைதா, கோதுமைக்குப் பதிலா இந்தப் பனங்கிழங்கு மாவைப் போட்டு செய்றேன். முதல்ல கிழங்கை வேக வச்சு காய வச்சிடுவேன். அப்புறம் அதைப் பதப்படுத்திப் பயன்படுத்துறேன். இது ஓராண்டு வரை கெட்டுப்போகாது. தேவைக்குத் தகுந்தமாதிரி மாவாக ஆக்கிப் பயன்படுத்த வேண்டியதுதான். பர்பிக்குப் பிறகு அல்வா செய்தேன். அடுத்து முறுக்கு, பால்பேடா, இடியாப்பம், கொழுக்கட்டை, புட்டு, சாக்லேட், சோன்பப்டி, பால்கோவானு பத்து வகையான உணவுப் பொருட்கள் பனங்கிழங்குல இருந்து தயாரிச்சிட்டு இருக்கேன். போனவாரம்தான் பால்கோவாவை அறிமுகப்படுத்தினேன். சாக்லேட்டைப் பொறுத்தவரை பனங்கிழங்கு மாவுடன் பாலும், கோக்கோ பவுடரும் சேர்த்து பண்ணினேன். முதல் அறிமுகத்திற்காக வெள்ளை சர்க்கரையில் செய்தேன். இப்ப பனஞ்சீனி, அதாவது பனங்கற்கண்டையும் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து பண்றதுக்கு தயாராகிட்டு இருக்கேன். இன்னும் ஒரு மாசத்துல ஆர்கானிக் சாக்லேட்டா கொண்டு வந்திடுவேன்...’’ என்கிற கார்த்திகேயன், விற்பனை பற்றியும் பேசினார்.

‘‘நெல் திருவிழா, உணவுத் திருவிழானு மக்கள் கூடக்கூடிய இடங்கள்ல ஸ்டால் போடுறேன். இதுதவிர, கல்யாணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விழாக்களுக்கு நிறைய ஆர்டர் வருது. மற்ற இனிப்புகளுக்குப் பதிலா பனங்கிழங்கு இனிப்புகளை ஆர்டர் செய்றாங்க. சிலர் தனிப்பட்ட முறையிலும் ஆர்டர் கொடுக்கிறாங்க. கொரியர் மூலமும் அனுப்பி வைக்கிறேன். நல்லா போகுது. அதனால, இப்ப என்னுடைய தோட்டத்துல மட்டுமில்லாமல் வெளியிலிருந்தும் பனங்கிழங்கு வாங்குறேன். அதை ஒரு ரூபாய் ஐம்பது காசுனு வாங்கறேன். ரொம்ப அடித்தட்டுல இருக்குற மக்கள்னா 2 ரூபாய் கொடுக்கறேன். இதை வியாபாரமா பண்ணல. பனைமரத்துல இருந்து விளையிற பொருட்களுக்கு மதிப்பு கூட்டணுங்கிற நோக்கத்துக்காகவே செய்றேன். ஒரு கிழங்குக்கு 3 ரூபாய் வரை கிடைச்சா ஒரு மரத்துல இருந்து ஆயிரத்து 800 ரூபாய் சாதாரணமா வருவாய் வரும். ஏழ்மையில் இருக்கக் கூடிய மக்களுக்கு அது பயனுள்ளதா இருக்கும். இப்ப எனக்கு செலவு எல்லாம் போக மாசத்துக்கு 17 ஆயிரம் ரூபாய் கையில நிக்கிது. அப்பா, அம்மாவின் முதல் எழுத்தும் என் பெயரின் முதல் எழுத்தும் சேர்த்து பிராண்டுக்கு ‘சிம்காஸ்’னு பெயர் வச்சிருக்கேன். இதுவரை யாரும் இதைப் பண்ணல. இந்தியாவில் முதல்முறைனு சொல்லலாம். ஏன்னா, கோவையில் 2018ல் உலக பனைப் பொருளாதார மாநாடு நடந்தது. அங்க நான் போயிருந்தப்ப இலங்கையில் இருந்தும் வந்திருந்தாங்க. என் முயற்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ‘எங்களுக்கும் பயிற்சி அளிக்க முடியுமா’னு கேட்டாங்க. அப்பதான் வேறெங்கும் இந்த முயற்சி எடுக்கலனு தோணுச்சு.

ஒவ்வொரு தயாரிப்புக்கும் பலகட்ட முயற்சி எடுத்து தரமா இருந்தால்தான் சந்தைக்குக் கொண்டு வருவேன். இல்லனா, முயற்சியோடு நிறுத்திடுவேன். இது எல்லாமே வீட்டுத்தயாரிப்பு. எனக்கு உதவியா என் அம்மாவும், மனைவியும், உடன்பிறந்த மூணு அக்காக்களும் இருக்காங்க. அப்பா சித்திரவேல் ராணுவத்துல பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ஓர் இடத்துல இரவுல பணி செய்றார். காலையில் எனக்கு ஒத்தாசையா இருப்பார். குடும்பமா சேர்ந்து இந்தத் தயாரிப்புகளை உருவாக்குறோம்...’’ எனப் பெருமிதமாகச் சொல்கிறார் இந்த 34 வயது இளைஞர். ‘‘என் ஆசையே 25க்கும் மேற்பட்ட பனங்கிழங்குத் தயாரிப்புகளை உருவாக்கி அதை கின்னஸ் சாதனையாக்கணும்ங்கிறதுதான். இப்ப பத்து பொருட்கள் பண்ணிட்டேன். இன்னும் பதினைஞ்சு பொருட்கள் பண்ணணும். அதுக்கான முயற்சிகள் எடுத்திட்டு இருக்கேன். பொதுவா, பனைமரத்தைப் பாதுகாக்கணும், பனங்கிழங்குல இருந்து பொருட்கள் தயாரிக்கலாம்னு சொல்றதைவிட ஒரு சாதனையைச் செய்திட்டு சொன்னா மக்கள்கிட்ட நம்பிக்கை வரும். பனங்கிழங்கிற்கும் மதிப்பு கூடும்...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் தமிழாசிரியர் கார்த்திகேயன்.

தொகுப்பு: பேராச்சி கண்ணன்

Tags : Chocolate Alva Balkova ,Tamil , Banankilangu, Chocolate Alva, Palkova, Tamil editor
× RELATED ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?… தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்