×

பருத்திவீரன் சினிமா பாணியில் விசாரணைக்கு சென்ற எஸ்ஐயிடம் வாக்கிடாக்கி, செல்போன் பறிப்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே விசாரணைக்கு சென்ற சப் இன்ஸ்பெக்டரின் வாக்கிடாக்கி,செல்போன் மற்றும் ஆவணங்களை பறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சப் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம் மகன் ஜகுபர்அலி(53). இவர் 1990ம் ஆண்டு அறந்தாங்கி அருகே நடந்த ராஜா, ராஜாமுகமது கொலை வழக்கில் முதல்குற்றவாளி. அந்த கொலை வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டில் உள்ளது. அந்த கொலை சம்பவத்திற்கு பிறகு ஜகுபர்அலி சென்னையிலேயே தங்கி இருந்தார்.

முகமது இப்ராகிம் தனது மனைவி ஹமீதாபீவியுடன் அரசர்குளத்தில் வசித்து வந்தார். அவரது குடும்பத்தினர் மலேசியாவில் வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முகமது இப்ராகிம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஹமீதாபீவி மட்டும் அரசர்குளத்தில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக இருக்க சில பணியாளர்களை அவரது குடும்பத்தினர் பணியமர்த்தி இருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்த ஜகுபர்அலி அரசர்குளத்திற்கு வந்து, அவரது தாயாருடன் வசித்தார். அவர் அரசர்குளம் வந்த தகவலை அறிந்த வெளிநாட்டில் வசித்து வரும் அவரது குடும்பத்தினர், ஜகுபர் அலியால் தனது ஹமீதாபீவியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தவறான நோக்கத்திலேயே ஜகுபர்அலி அரசர்குளம் வந்துள்ளதாகவும், ஹமீதாபீவியுடன் தாங்கள் வெளிநாட்டில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியாதபடி போன் இணைப்பை துண்டித்து விட்டதாகவும், போலீசாருக்கு வெளிநாட்டில் இருந்து புகார் மனு அனுப்பினர்.

இந்த புகார் மனு போலீசாருக்கு கிடைக்கப்பட்ட மறுநாள் ஹமீதாபீவி (88) திடீரென்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அமிதாபீவியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகுடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அரசர்குளத்தில் உள்ள ஹமீதாபீவி வீட்டிற்கு அவரது மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த அவரது மகன் ஜகுபர்அலி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை அவதூறாக பேசியதுடன், அவரது செல்போன், வாக்கிடாக்கி, மற்றும் சி.டி பைல் எனப்படும் ஆவணம் ஆகியவற்றை பறித்துள்ளார். மேலும் ராஜேந்திரனை ஜகுபர் அலி மிரட்டியும் உள்ளார்.
தொடர்ந்து ஜகுபர்அலி ராஜேந்திரன் செல்போனில் இருந்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசீலனுக்கு போன் செய்து, அவரையும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு, ஜகுபர்அலியுடன் பேசி, ராஜேந்திரனின் செல்போன் மற்றும் வாக்கிடாக்கியை வாங்கி, ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அரசர்குளத்தில் ஜகுபர்அலி அத்துமீறி நடந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி டி.எஸ்.பி ஜெயசீலனிடம் புகார் தெரிவிக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்பாகவே ஜகுபர்அலி, ராஜேந்திரனிடம் இருந்து பறித்துக் கொண்ட சி.டி பைலுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரனிடம், டி.எஸ்.பி ஜெயசீலன், அந்த விசயத்தை பெரிதுபடுத்தாமல், சமாதானமாக போகும்படி தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஜகுபர்அலி தன்னை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, அவதூறாக பேசியதாகவும், அரசு ஆவணங்கள் மற்றும் உடமைகளை பறித்துக் கொண்டதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி போலீஸ் டி.எஸ்.பி ஜெயசீலனிடம் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : SI ,Cotton Veeran ,cinema style investigation , Paruthi veeran, walkie talkie, cell phone
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...