×

மதுரை-போடி அகல ரயில் பாதை தண்டவாளம் அமைக்கும் பணி தாமதம்

தேனி: தேனி நகரில் நெடுஞ்சாலைகளில் ரயில்வே கிராசிங்கால் தண்டவாளம் அமைப்பது தாமதமாகி உள்ளது. போடி-மதுரை இடையிலான மீட்டர்கேஜ் ரயில் சேவை கடந்த 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மீட்டர்கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக ஏற்கனவே ஓடிய மீட்டர்கேஜ் ரயில் நிறுத்தப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிராட் கேஜ் ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மேலும் உசிலம்பட்டி வரை ரயில் சந்திப்பு நிலையங்கள், தண்டவாளம் அமைக்கும் பணி என அனைத்தும் முடிவுற்று ரயில் சோதனை ஓட்டமும் முடிவடைந்துள்ளது.

உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி வரை ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் ரயில் சந்திப்பு நிலையங்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தேனி நகரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்புறம் வரையிலும் தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. புதிய பஸ் நிலையம் பிரிவுக்கு முன்பாக ரயில்வே கிராசிங் உள்ளது. இச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே செல்கிறது. சாலையின் குறுக்கே ரயில்வே தண்டவாளம் அமைக்கும் போது உயரமாக அமைக்கும் நிலை உள்ளது. இதனால் தேனியிலிருந்து போடி, கம்பம், குமுளி, மூணாறு உள்ளிட்ட வழித் தடங்களுக்கு சென்று வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையுடன் பேசி ரயில்வே கிராசிங்கில் தண்டவாளம் அமைப்பதற்காக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கிராசிங் உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும்போது தண்டவாளம் உயர்ந்து வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இச்சாலையில் தண்டவாளம் அமைக்கவும் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை பேசிய பிறகு இவ்விரு இடங்களிலும் விரைவில் தண்டவாளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்டவாளம் அமைக்கும் பணி விரைவில் முடிவடைந்தால் மதுரை மற்றும் போடி இடையே இன்னும் ஓர் ஆண்டுக்குள் ரயில்வே சேவை துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Tags : Bodi ,Madurai , Railroad, rail
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது