×

பிரதான பயிராக இருந்தும் பயனில்லை: மரவள்ளிக்கு உரிய விலை கேட்டு அல்லாடும் விவசாயிகள்

‘பயிரை விளைவித்து மனித உயிரை காப்பாற்றும் வாழும் அற்புத மேதைகள் விவசாயிகள். ஆனால் அவர்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். இப்படி சேலம் மண்டலத்தில் மரவள்ளி பயிரிட்டு உழைப்புக்கு உரிய விலை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர் ஆயிரக்கணக்கான விவசாயிகள். அப்படி குரலற்று போனவர்களின் குரலாக ஒலிக்கிறது இந்த தொகுப்பு. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகளின் பிரதான உற்பத்தி பொருளான மரவள்ளி லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ளூர் சந்தைகள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இதில் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் மரவள்ளி சாகுபடியில், தமிழக அளவில் சேலம் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது.

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மரவள்ளியின் மேம்பாட்டுக்கான சேகோசர்வ் நிறுவனம் சேலத்தில் உள்ளது. இதே போல் ஏராளமான சேகோ ஆலைகளும், ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனங்களும் சுற்றுப்புறங்களில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மரவள்ளி பயிரிடும் விவசாயிகளுக்கு நஷ்டமே மிஞ்சி வருகிறது. உரிய விலை வழங்க, விவசாயிகள், சேகோ சர்வ் மற்றும் ஆலை உரிமையாளர்களுடன் ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது அனைத்து தரப்பும் இணைந்து சாதகமான விலையை நிர்ணயம் செய்தாலும், அதனை நடைமுறைப்படுத்த ஆலை உரிமையாளர்களும், அதிகாரிகளும் முன்வருவதில்லை. இதனால், மரவள்ளிக்கான முத்தரப்பு கூட்டத்தை, சம்பிரதாய கூட்டமாகவே விவசாயிகள் பார்க்கின்றனர்.

எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டால் தான், அதன் விலை உயரும். அந்த பார்முலாவை கையாண்டாவது, நியாயமான விலை கிடைக்க செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது, மரவள்ளி கிழங்கை முழுக்க, முழுக்க ஆலைக்கு கொண்டு செல்வதால் தான், உரிமையாளர்கள் சொல்லும் ஏதாவது ஒரு விலைக்கு கொடுத்துவிட்டு வர வேண்டியுள்ளது. அதில் 50 சதவீதமாக குறைத்தால், உரிய விலை கிடைக்கும். மீதமுள்ள 50 சதவீதத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: தற்போதுள்ள நிலையில், 75 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு, குறைந்தபட்சம் ரூ.750 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், மண் கழிவு, பாயிண்ட் இல்லை எனக்கூறி ரூ.350க்கு மேல் ஆலை உரிமையாளர்கள் தர மறுப்பது வேதனையளிக்கிறது. என்னதான் அதிகாரிகள் முன்னிலையில் விலை நிர்ணயம் செய்தாலும், குறைந்த விலையையே ஆலை உரிமையாளர்கள், வழங்குகின்றனர். அளவு கடந்து, ஆலைக்கு மரவள்ளி வருவது தான் இதற்கு முக்கிய காரணம். எனவே அதற்கான மாற்றாக, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகும் கிழங்கை, வீட்டில் சமைத்து சாப்பிட்டால், அந்த குடும்பத்திற்கு சத்தான ஒருவேளை உணவாக அது இருக்கும்.

விவசாயிகளுக்கு வாழ்வழிக்கும் அதேவேளையில், மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் மரவள்ளி கிழங்கை உணவுப்பொருட்களாக்க, அரசு சார்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்ய வேண்டும். உருளைக்கிழங்கில் செய்யப்படும் சிப்ஸ், பூரி மசால் என அனைத்து விதமான உணவுகளையும், மரவள்ளியை கொண்டு செய்ய முடியும். இதுதவிர, மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் கவர், பாக்கு மட்டை போன்ற தட்டு, முகத்திற்கு பூசப்படும் பவுடர் முதல் மருந்து மாத்திரைகள் வரை பல்வேறு பொருட்கள் தயாரிப்பிற்கும் மரவள்ளி கிழங்கு உதவுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் தான்,மரவள்ளிக்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் மன்றாட வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, மரவள்ளி விவசாயிகளை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிற்கு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Farmers, cassava
× RELATED மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய்...