×

அச்சமின்றி ஜவுளிக்கடைகளில் குவியும் மக்கள்: மீண்டும் கொரோனா பரவல் உச்சத்திற்கு செல்லும் அபாயம்

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிக்கடைகளில் சமூக இடைவெளிகள் இன்றி மக்கள் குவிந்து வருவதால், கொரோனா பரவல் மீண்டும் உச்சத்திற்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்தது. நம் நாட்டில் முழு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு, இன்று வரை பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும் இதுவரையில் 82.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.22 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த 2 மாதங்களாக அதிகளவு இருந்தது. அது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2,500 ஆக குறைந்துள்ளது. இறப்போரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்திருக்கிறது.

இந்நிலையில், வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்காக புத்தாடை வாங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை தி.நகரில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சேலத்தில் சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி மற்றும் 4 ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பெரிய அளவிலான ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தள்ளுபடி விற்பனை, பரிசுடன் கூடிய விற்பனையை சில கடைகள் அறிமுகப்படுத்தியுள்ளதால், அங்கு சமூக இடைவெளியின்றி மக்கள் திரண்டு நிற்கின்றனர். முகக்கவசமும் சரிவர அணியாமல், சுற்றித்திரிகின்றனர். சிறிய அளவில் உள்ள ஜவுளிக்கடைக்குள்ளும் 15க்கும் மேற்பட்டோர் நிற்பதால், கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுநாள் வரையில் கடைபிடித்து வந்த சமூக இடைவெளி தற்போது, காணாமல் போய்விட்டது. புத்தாடைகளை தேர்வு செய்வதில்தான், அதிக கவனத்தை மக்கள் செலுத்துகின்றனர். அருகே நிற்கும் நபர், முறையாக முகக்கவசம் அணிந்துள்ளரா? என்பதை கூட பார்ப்பதில்லை. அதேபோல் ஜவுளிக்கடைகளின் ஊழியர்களும், குறிப்பிட்ட நபர்களை ஷிப்ட் அடிப்படையில் உள்ளே அனுமதித்து, பின்னர் வெளியேற்றி மற்றவர்களை அனுமதிக்கலாம். அதனை யாரும் செய்வதில்லை. இதனால், சேலத்தில் கொரோனா பரவல் தற்போது தினமும் 150 பேர் என குறைந்திருப்பது, மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் களப்பணியாற்றி வருகின்றன. சமூக இடைவெளி இன்றி வணிக நிறுவனங்களில் கூடினால், அபராதம் விதிக்கும் முறையும், கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை அதிகாரிகள் தீவிரமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது, கண்டுகொள்ளாமல் உள்ளனர். பெரிய கடைகளில் கண் துடைப்பிற்கு ஆய்வு நடத்திவிட்டு அதிகாரிகள் வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கிருமிநாசினி பயன்பாடு, சமூக இடைவெளி கடைப்பிடித்தலை தீவிரமாக முனைப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான், கொரோனா பரவல் மீண்டும் உச்ச நிலைக்கு செல்லாமல் தடுக்க இயலும்.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ஜவுளிக்கடைகளிலும், பேக்கரிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. அங்கு, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் அதனை காணமுடியவில்லை. விதிமுறைகளை மீறும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் கொரோனா தொற்று மீதான அச்சம் மக்களிடம் குறைந்திருப்பதை காணமுடிகிறது. இந்த தொற்று நோய், உயிரை கொல்லும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதிலும் முகக்கவசம் அணிவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்,’’ என்றனர்.

கழுத்தில் மாஸ்க் அணிவதால் பலனில்லை

சேலம் மாநகர பகுதியில் வாகனங்களில் சுற்றுவோரில் பலரும் முகக்கவசம் இன்றி செல்கின்றனர். அதேபோல், ஜவுளிக்கடைகளுக்கும் முகக்கவசம் இன்றி வந்து, துணிகளை வாங்கிச் செல்கின்றனர். சிலர், ஏதோ அணிந்தோம் என்ற பெயருக்கு முகக்கவசத்தை கழுத்தில் மாட்டி வைத்திருக்கின்றனர். முறையாக மூக்கையும், வாயையும் மறைக்கும் வகையில் முகக்கவசத்தை அணிந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க இயலும். கழுத்தில் முகக்கவசத்தை அணிந்திருந்தால் எந்த பலனும் இல்லை. அதனால்,முழுமையாக மூக்கையும், வாயையும் மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : shops ,corona spread , Corona, Diwali
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி