×

மாமூலில் மூழ்கி கிடக்கிறார்கள்: விபசார புரோக்கர்களின் பிடியில் குமரி காவல்துறை அதிகாரிகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை, விபசார புரோக்கர்கள் சிலர் தங்களது பிடியில் வைத்து காரியங்களை சாதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் காவல்துறையை பொறுத்தவரை செல்வ செழிப்பான மாவட்டமாகும். இயற்கை எழில், குளுமைக்கு மட்டுமல்ல, மனம் குளிரும் வகையில் வாரி வழங்கும் மகா ராஜாக்கள் உள்ள இடம் என்பதால், இந்த மாவட்டத்தில் பணியாற்றி வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் எப்படியாவது, மீண்டும் இந்த மாவட்டத்துக்கே வந்து விடுவார்கள். இது காலங்காலமாக நடந்து வருகிறது. இப்போது பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் சிலர் கூட ஏற்கனவே இந்த மாவட்டத்தில் பணியாற்றி, வெளி மாவட்டத்துக்கு சென்று சில மாதங்களில் மீண்டும் இந்த மாவட்டத்துக்கே பணிக்கு வந்தவர்கள் ஆவர். இதற்காக இவர்கள் லட்சங்களை வாரி கொடுக்கவும் தயங்குவதில்லை.

பல்வேறு வழிகளில் இங்கு பணம் வந்து குவிந்தாலும் தற்போது குமரி மாவட்டத்தில் மாமூல் வழங்குவதில் முதலிடத்தில் இருப்பது அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் அனுமதியின்றி இயங்கும் மது பார்களும் தான். இதற்கென உள்ள புரோக்கர்களுடன், குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சில காவல்துறை அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவ்வாறு வளர்ந்து நிற்கும் புரோக்கர்கள் சிலர் தான், குமரி மாவட்ட காவல் துறையையே ஆட்டி படைத்து வருகிறார்கள். மசாஜ் சென்டர்களுக்கு நேரடியாக சென்று மாமூல் வாங்கியதுடன் அல்லாமல், மற்ற விவகாரமும் அரங்கேறி இப்போது அது வீடியோ பதிவாக இது போன்ற சில புரோக்கர்களின் கையில் உள்ளது. இந்த வீடியோக்கள் வெளி வந்தால், பல போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இது போன்ற புரோக்கர்கள் முதலில் காவல் துறை அதிகாரிகளை இன்பார்மர் போல் தொடர்பு கொள்வது வாடிக்கை ஆகும். மசாஜ் சென்டரில் விபசாரம், திருட்டு மது விற்பனை என காவல் துறை அதிகாரிக்கு தகவல் சொல்வார்கள். அந்த மசாஜ் சென்டர் சென்றால், இவர் கூறியது போல் அழகான பெண்கள் இருப்பார்கள். அனுமதி சான்று இருக்காது. எனவே உடனடியாக அந்த மசாஜ் சென்டரை போலீசார் சீல் வைப்பார்கள். அன்று முதல் தகவல் கூறிய புரோக்கர் அந்த அதிகாரிக்கு நெருக்கமாகி விடுவார். அந்த நெருக்கத்தை வைத்தே மற்ற போலீசாரை சரிகட்டி மீண்டும் வேறொரு இடத்தில் மசாஜ் சென்டர் ஆரம்பித்து விடுவார். தனக்கு ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகள் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி, அவர்களை இடமாற்றம் செய்வதிலும் இது போன்ற புரோக்கர்கள் முன்னணியில் உள்ளனர். எந்த அதிகாரி எந்த காவல் நிலையத்துக்கு இடமாறுகிறார் என்பதையும் முன்கூட்டியே கணித்து சொல்லும் அளவுக்கு இந்த புரோக்கர்களின் வளர்ச்சி உள்ளது.

காவல் நிலையங்களுக்கு இவர்கள் சென்றால், வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் இன்ஸ்பெக்டர்களும் இருக்கிறார்கள். ஒரு வேளை ஏதாவது வழக்கில் சிக்கினால் கூட நாற்காலியில் உட்கார வைத்து உபசரித்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கும் நிலை உள்ளது. அந்தளவுக்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த புரோக்கர்கள் உள்ளனர். எந்த அதிகாரிகள் வந்தாலும் இவர்கள் எளிதில் சமாளித்து விடுகிறார்கள். ஏற்கனவே உயர் பொறுப்பில் இருந்த பலரும் கூட, விபசார புரோக்கரின் பிடியில் சிக்கியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்களும் உள்ளன.

இந்த நிலையில் தற்போதைய எஸ்.பி. பத்ரி நாராயணன், காவல்துறையில் உள்ள சீர்கேடுகளை களைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கஞ்சா வேட்டை, புகையிலை பொருட்கள் விற்பனை ஒழிப்பு, கடத்தல், ரவுடியிசம் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளிலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான விசாரணைகளை வேகமாக முடிப்பதிலும் எஸ்.பி. பத்ரி நாராயணன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல், புரோக்கர்களின் பிடியில் உள்ள காவல்துறையின் கருப்பு ஆடுகளை கண்டறிந்து, அவர்களையும் ஒடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், குமரி காவல்துறையை கைக்குள் வைத்துள்ள புரோக்கர்களின் ஆட்டத்துக்கும் முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : police officers ,Kumari , Kumari, Police
× RELATED கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில்...