×

விலை உயர்வு, தட்டுப்பாட்டை தடுக்க திருச்சி வந்தது 25 டன் எகிப்து வெங்காயம்

திருச்சி: திருச்சிக்கு கடந்த வாரங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 250 டன் பெரிய வெங்காயம் வந்தது. இதற்கிடையில் மகாராஷ்டிராவில் வரத்து குறைவானதால் விலை கூடுமோ என்ற அச்சத்தில் மும்பையில் உள்ள பெரிய வியாபாரியிடம் பேசியதில் கடந்த வாரம் எகிப்து வெங்காயம் 5 டன் வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் நேற்று 25 டன் எகிப்த் பெரிய வெங்காயம் மும்பையில் இருந்து வந்துள்ளது. இதன் அடக்கம் ரூ.60 ஆகிறது. ஆனால், ரூ.60 விற்குமா என சந்தேகம் ஏற்படுகிறது. காரணம் வெங்காயம் கலர், மற்றும் அது இங்கு வருவதற்குள் முளைப்பு திறன் வந்துவிட்டது. இதனால் மக்களுக்கு இதை கொண்டு சேர்ப்பத்தில் சிரமம் தான். இதனால் கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெங்காயம் அதிக விலைக்கு ஏலம் போகாமல் இருக்க இந்த வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளோம். தொடர்ந்து மும்பையில் இருந்து எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்ய பேசி வருகிறோம். தீபாவளி வரை விலை குறைய வாய்ப்பு இல்லை. ஆனால், ஜனவரி மாதம் தற்போது விற்கும் விலையில் பாதிகூட விற்க முடியாது. அந்த அளவுக்கு மகாராஷ்டிராவில் வெள்ளாமை நன்றாக உள்ளது.

ஜனவரி மாதம் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் பாதிக்கு பாதி விலை குறைந்துவிடும். திருச்சியில் இருந்து 8 மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தினசரி 25 லாரிகளில் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் 300 டன் வரை தேவைப்படுகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே 200 டன் அளவு தான் வந்தது. இந்த அளவை கூட்டுவதற்காகத்தான் எகிப்து வெங்காயத்தை கொண்டு வந்துள்ளோம். இப்போது 50 டன் எகிப்து வெங்காயம் வந்துள்ளது. தொடர்ந்து எகிப்து மட்டுமின்றி துருக்கியில் இருந்தும் வெங்காயம் கிடைத்தாலும் வாங்க தயாராக உள்ளோம். லாப நோக்கமின்றி தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

மஞ்சள் கலரில் துருக்கியிலும், கருஞ்சிவப்பில் எகிப்திலும் இருந்து வெங்காயம் வருகிறது. வித்தியாசமான கலராக உள்ளதால் காரம் குறைவாக இருக்குமா, கூட இருக்குமா என மக்கள் நினைக்கின்றனர். 30 டன் வெங்காயம் வாங்கினால் 3 முதல் 5 டன் கழிவு ஏற்படுகிறது. இதையும் சரிகட்ட விலையேற்ற வேண்டியுள்ளது. பம்பாயில் ரூ.50க்கு வாங்கி அதனை இங்கு கொண்டு வர போக்குவரத்து செலவு கிலோவுக்கு ரூ.6 செலவாகிறது. அதில் வெங்காய கழிவுகளை ஈடு செய்தால் அதன் அடக்கம் கிலோ ரூ.60 ஆகிவிடுகிறது. ஆனால், அந்த அளவுக்கு தற்போது விற்பனை செய்ய முடியவில்லை. ரூ.5 முதல் 10 வரை குறைவாக விற்னை செய்கிறோம். லாரிக்கு 30 டன் எனில் அதை இந்த குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவித்தனர்.

Tags : Egyptian ,Trichy , Onions
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...