×

கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது

மீனம்பாக்கம்: கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.கடந்த 2020, ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து 520 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. 74 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, உள்நாட்டு விமானங்கள், சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. 
இதனால் பெரும்பாலும் பயணிகள் விமான சேவையை தவிர்த்தனர். தற்போது கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மருத்துவமனைகளில் இட பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. சென்னையில் இருந்து நேற்று கொல்கத்தாவுக்கு செல்ல இருந்த 9 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வர இருந்த 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இன்று சென்னையில் இருந்து 54 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. 2 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர். 53 விமானங்கள் சென்னைக்கு வர உள்ளது. 3800 பயணிகள் பயணிக்கின்றனர். இன்று கொல்கத்தாவுக்கு புறப்பட இருந்த விமானங்கள் மற்றும் வரக்கூடிய விமானங்கள் என மொத்தம் 12 விமானங்களில் குறைந்தளவு பயணிகள் பயணிக்கின்றனர். அதுவும், அவர்களுக்கு, ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 
கடந்த ஏப்ரல் 24ம் தேதி உள்நாடுகளுக்கு புறப்பாடு விமானங்கள் 90 இயக்கப்பட்டன. 8975 பேர் பயணம் செய்தனர். வருகை விமானங்கள் 94 எனவும் 6471 பேர் பயணம் செய்தனர். இது கடந்த 4ம் தேதி புறப்பாடு விமானம் 51 எனவும், 4314 பேர் பயணம் செய்தனர். வருகை விமானங்கள் 53 எனவும், 3591 பேர் பயணம் செய்தனர். வெளிநாடுகளுக்கு கடந்த ஏப்ரல் 24ம் தேதி 9 விமானங்கள் இயக்கப்பட்டது. 1022 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 4ம் தேதி 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டது. 588 பயணிகள் பயணம் செய்தனர். தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

The post கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது appeared first on Dinakaran.

Tags : Corona's 2nd wave of panic ,service ,Fishenambakkam ,2nd wave of Corona pandemic ,Chennai ,Corona 2nd wave of panic ,
× RELATED மின்னகம் சேவை மைய தரவுகள் மூலம் மின்...