×

மும்பை இந்தியன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: நைட் ரைடர்ஸ் ஏமாற்றம்

ஷார்ஜா: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரன் ரேட் அடிப்படையில் 3வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன் லீக் சுற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், மும்பை - ஐதராபாத் அணிகளிடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறப் போகும் 4வது அணி எது என்பதை தீர்மானிப்பதாக அமைந்தது.

லீக் சுற்றின் கடைசி ஆட்டம் வரை இப்படி இழுபறி நீடித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் (தலா 12 புள்ளிகள்) வாய்ப்பை இழந்து வெளியேறிய நிலையில், மும்பைக்கு எதிராக வென்றாலே கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடலாம் என்ற முனைப்புடன் சன்ரைசர்ஸ் கடைசி லீக் ஆட்டத்தை எதிர்கொண்டது.
நடப்பு சாம்பியன் மும்பைக்கு இப்போட்டி ஒரு பயிற்சி ஆட்டம் என்றே சொல்ல வேண்டும். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா, முழு உடல்தகுதியுடன் மீண்டும் தலைமையேற்றார். அந்த அணியில் போல்ட், பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு பேட்டின்சன், குல்கர்னி சேர்க்கப்பட்டனர். ரோகித்துக்காக, ஜெயந்த் யாதவ் வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.

ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக பிரியம் கார்க் இடம் பெற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை தொடக்க வீரர்களாக ரோகித், டி காக் களமிறங்கினர். ரோகித் 4 ரன் மட்டுமே எடுத்து சந்தீப் வேகத்தில் வார்னர் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து டி காக்குடன் சூர்யகுமார் இணைந்தார். அநாயசமாக விளையாடிய டி காக் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஐதராபாத் பவுலர்களை மிரள வைத்தார்.

13 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன் விளாசிய அவர், சந்தீப் ஆப் சைடில் வைடாக வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஆசைப்பட, மட்டையின் உள் விளிம்பில் பட்டுத் தெறித்த பந்து ஸ்டம்புகளை சிதைத்தது. தேவையில்லாமல் விக்கெட்டை தானம் செய்த டி காக் விரக்தியுடன் பெவிலியன் திரும்ப, ஐதராபாத் வீரர்கள் உற்சாகமடைந்தனர். பொறுப்புடன் விளையாடிய சூர்யகுமார் - இஷான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்து மும்பை அணிக்கு நம்பிக்கை அளித்தது. சூர்யகுமார் 36 ரன் (29 பந்து, 5 பவுண்டரி) எடுத்து நதீம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த குருணல் பாண்டியா டக் அவுட்டாகி வெளியேற, சவுரவ் திவாரி 1 ரன் மட்டுமே எடுத்து ரஷித் சுழலில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் பிடிபட்டார். மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் என்ற வலுவான நிலையில் இருந்து, 82 ரன்னுக்கு 5 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், இஷான் - போலார்டு இணைந்து 33 ரன் சேர்த்தனர். இஷான் 33 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), கோல்டர் நைல் 1 ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினர்.

நடராஜன் வீசிய 19வது ஓவரில் போலார்டு ஹாட்ரிக் சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்தினார். அவர் 41 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் அந்த அணிக்கு 51 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பேட்டின்சன் 4, குல்கர்னி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐதராபாத் பந்துவீச்சில் சந்தீப் 3, ஹோல்டர், நதீம் தலா 2, ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். நதீம் 4 ஓவரில் 19 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, 150 ரன் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் வார்னர் 85 ரன்னும் (58 பந்து, 10 பவுண்டரிகள், 1 சிக்ஸ்ர்), சாஹா 58 ரன்னும் (45 பந்து, 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தினர். இவர்கள் இருவர் மட்டும் இணைந்து, வெற்றி பெற தேவையான 151 ரன்கள் இலக்கை 17.1 ஓவர்களில் அசாத்தியமாக எடுத்தனர். இதன் மூலம், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Tags : Sunrisers ,Mumbai Indians ,Knight Riders , Sunrisers beat Mumbai Indians to advance to play-off round: Knight Riders disappointed
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு