மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் ஷார்ஜாவில் இன்று தொடக்கம்

ஷார்ஜா: ஐபிஎல் போட்டிகளுக்கு இடையில் மகளிர் அணிகள் மோதும் ‘டி20 சேலஞ்ச்’ கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்குகிறது.

ஆண்களுக்கான ஐபிஎல் டி20 போட்டியை போன்று, பெண்களுக்காக ‘டி20 சேலஞ்ச்’ கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. ஐபிஎல்  போட்டிகளுக்கு இடையில் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டியில் வெலாசிட்டி, சூப்பர்நோவாஸ், டிரையல் பிளேசர்ஸ் என 3 அணிகள்  பங்கேற்கின்றன. இப்போது 2வது ஆண்டாக ‘மகளிர் சேலஞ்ச்’ இன்று முதல் 9ம் தேதி வரை ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் மிதாலி ராஜ்  தலைமையிலான வெலாசிட்டி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரெய்ல்பிளேசர்ஸ் ஆகிய  அணிகள் விளையாட உள்ளன.

இந்த அணிகளில் இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி ஐபிஎல் போலவே இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, தாய்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்  ஆப்ரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். களமிறங்கும் ஒவ்வொரு அணியிலும்  அதிகபட்சமாக தலா 4 வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை லீக்  ஆட்டத்தில் மோதுகின்றன. புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 9ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்தப்போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அக்.22ம் தேதி ஷார்ஜா வந்தனர். அங்கு  6 நாட்கள் தனிமைப்படுத்துதல், கொரோனா சோதனைக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு அணியிலும் தலா 15  வீராங்கனைகள் உள்ளனர். இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் மோத உள்ளன.

வெலாசிட்டி: மித்தாலி ராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஷ்ட்,  மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, தேவிகா வைத்யா, சுஷ்ரீ திவ்யதர்ஷினி, மணாலி தக்‌ஷிணி, லெய் கேஸ்பரெக், டேனியலி வியாட், சுனே லுவஸ்,  ஜகானாரா ஆலம், எம்.அனகா.

சூப்பர்நோவாஸ்: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகியூஸ் (துணை கேப்டன்), சமாரி அட்டப்பட்டு, பிரியா பூனியா, அனுஜா பட்டீல், ராதா  யாதவ், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷஷிகலா வர்தனே, பூணம் யாதவ், ஷகிரா செல்மான், அருந்ததி ரெட்டி, பூஜா வத்ஸ்ராகர், ஆயுஷி  சோனி, அயபோங்கா காகா, முஸ்கான் மாலிக்.

டிரெய்ல்பிளேசர்ஸ்: ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா (துணை கேப்டன்), பூணம் ராவுத், ரிச்சா கோஷ், டி.ஹேமலதா, நுஷாத் பர்வீன்  (விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கெயிக்வாட், ஹர்லீன் தியோல், ஜுலன் கோஸ்வாமி, சிமரன் தில் பகதூர், சல்மா கதுன், சோபி எக்லஸ்டோன், நத்தகன்  சாந்தம், தியாந்த்ரா டோட்டின், கஷ்வீ கவுதம்.

கடந்த சீசனில்...

மகளிர் சேலஞ்ச் தொடரில் கடந்த ஆண்டு லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இதையடுத்து, ரன் ரேட்  அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த வெலாசிட்டி-சூப்பர்நோவாஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில்  சூப்பர்நோவாஸ் 4விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Related Stories:

>