×

பழநியில் கந்தசஷ்டி விழா நடக்குமா?... பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்வதால் பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தற்போது வரை, கொரோனா பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடக்க வேண்டிய பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா, அக்னி நட்சத்திர கழுதிருவிழா, வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. தளர்வுகளை தொடர் ந்து கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரசாதம் வழங்குதல், பூஜை பொருட்கள் பெறுதல் போன்றவைக்கு அனுமதியில்லை. மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா வரும் 15ம் தேதி துவங்க வேண்டும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் முறையே நவ.20, 21ம் தேதிகளில் நடைபெற வேண்டும். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பலர் சஷ்டி விரதம் மேற்கொள்வது வழக்கம். தற்போதுள்ள சூழ்நிலையில் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளவும், விரதத்தை முடித்துக் கொள்ளவும் கோயில்களுக்கு வர வேண்டி உள்ளது. எனவே, இது குறித்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை இணையதளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kandasashti ,festival ,Palani ,Devotees , Will Kandasashti festival take place in Palani? ... Devotees expect
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது