×

கேரளாவில் இன்று துப்பாக்கி சூடு: மாவோயிஸ்ட் தீவிரவாதி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்கு அடிக்கடி அதிரடிப்படை வீரர்களுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பது வழக்கம்.  அதன்படி கடந்த ஆண்டு மார்ச்சில் வயநாடு வயித்திரி பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் மாவோயிஸ்ட்டுகள், அதிரடிப்படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஜலீல் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த  சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அதிகாலை வயநாடு படிஞாறேத்தர போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ‘தண்டர் போல்டு’ அதிரடிப்போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், திடீரென அதிரடிப்படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சுதாரித்துக்கொண்ட அதிரடிப்படை வீரர்களும் பதிலுக்கு திருப்பி சுட்டனர். தொடர்ந்து பின்வாங்கிய மாவோயிஸ்ட்டுகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தனர். அவர்களை தேடி பிடிக்க கூடுதல் அதிரடிப்படையினர் வனப்பகுதிக்குள் விரைந்து  உள்ளனர். துப்பாக்கி சூட்டால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் மீண்டும் துப்பாக்கிச்சூடு தொடங்கி நடந்து வருவதாகவும் தெரிகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் பலியானதாகவும், மற்றொருவர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்பி பூங்குழலி தலைமையில் போலீசாரும் சம்பவ இடம் விரைந்துள்ளனர். வயநாடு அருகே மீன்முட்டி, பந்நிப்புயில், வாளாம்குன்று கடந்த சில தினங்களாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றிரவு அதிரடிப்படையினர் அங்கு தீவிர ரோந்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Shooting ,Kerala ,Maoist , Shooting in Kerala today: Maoist militant killed
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...