நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைகிறது; பண்டிகை காலங்களில் கவனம் தேவை: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பேட்டி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கோவிட்-19 தொற்று இந்தியாவிலும் பரவி அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில இடங்களில் நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 82,67,623-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,23,097 பேர் உயிரிழந்த நிலையில் 76,03,121 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் தற்போது 5,41,405 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 7 வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு, செப் 16 - 22 காலகட்டத்தில் 90,346 ஆக இருந்த நிலையில் அக். 28 - நவ.3 வரையிலான காலகட்டத்தில் 45,884 ஆக குறைந்தது. தினசரி கொரோனா இறப்பு, செப் 16 - 22 காலகட்டத்தில் 1,165 ஆக இருந்த நிலையில் அக். 28 - நவ.3 வரையிலான காலகட்டத்தில் 513 ஆக குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லி, கேரளா, மணிப்பூர், மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மணிப்பூரில் முன்னதாக 2000- இருந்து வந்த நிலையில் இப்போது 3500 -ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிப்புகள் 26000-ல் இருந்து 33000 ஆக அதிகரித்துள்ளன. கேரளாவில் 77000 இலிருந்து பாதிப்புகள் 86000 ஆக அதிகரித்துள்ளன. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். எண்ணிக்கை அதிகரிக்காத வண்ணம் பண்டிகை காலங்களில் கவனம் தேவை. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 92%-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

>