×

11 இடங்களில் வீதியே பள்ளி! கொரோனா காலத்தில் 11 துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அசத்தல் பணி

நன்றி குங்குமம்

இந்தக் கொரோனா காலத்தில் பெற்றோருக்குப் பெரிய பிரச்னையாகவே மாறிவிட்டார்கள் குழந்தைகள். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டில் அவர்கள் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது. பள்ளிகள் எப்போது திறக்குமோ... என புலம்பாத பெற்றோர் இல்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் வகுப்பறை போல குழந்தைகள் படிப்பதில்லை. இந்த இடத்தில்தான் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சரவணனின் வீதி பள்ளிக்கூடம் பெற்றோரை ஆசுவாசப்படுத்துகிறது. அவரும், அவரின் பள்ளி ஆசிரியைகள் பத்து பேரும் சேர்ந்து பதினோரு பகுதிகளில் இந்த வீதி பள்ளியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். மதுரை கீழச்சந்தைப்பேட்டை பகுதியிலுள்ள டாக்டர் டி.திருஞானம் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் சரவணன் உற்சாகத்துடன் பேசுகிறார். ‘‘கடந்த மூணு மாசங்களா நாங்க இந்த வீதி பள்ளிக்கூடத்தை நடத்திட்டு இருக்கோம். கொரோனா காலங்கிறதால முதல்ல பாடங்களை வீடியோ பண்ணி அதை வாட்ஸ்அப்ல ஒரு குரூப் ஆரம்பிச்சு போட்டோம். எங்க துவக்கப்பள்ளில 252 குழந்தைகள் படிக்கிறாங்க. இந்தக் குழந்தைகள் பக்கத்துப் பக்கத்து பகுதிகள்ல இருந்தும் வர்றாங்க. இந்நிலைல வெறும் 85 குழந்தைகள்கிட்ட மட்டும்தான் வாட்ஸ்அப் வசதி இருந்துச்சு. ஜூன், ஜூலை வரை இப்படித்தான் போனது. எல்லோருக்கும் ஆன்லைன் கல்வி போய்ச் சேரலையேனு எங்களுக்கு வருத்தமா இருந்துச்சு. என்ன பண்றதுனு யோசிச்சோம். அப்பதான் குழந்தைகளின் வசிப்பிடத்திற்கே போய் சொல்லிக் கொடுத்தா என்னனு தோணுச்சு. ஏன்னா, நாங்க கடந்த அஞ்சு வருஷங்களா சனி, ஞாயிறு விடுமுறைகள்ல கிராமங்களுக்குப் போய் குழந்தைங்களுக்குக் கதை சொல்லிட்டு வர்றோம். அதாவது, ஒரு கிராமத்துக்குப் போய் அங்குள்ள குழந்தைகள ஓர் இடத்துல ஒழுங்குபடுத்தி கதை சொல்றது, புத்தகங்கள் வாசிக்க வைக்கிறது, காந்திய சிந்தனைகளை எடுத்துரைப்பது, குழந்தைகளை வச்சே வீதி நாடகங்கள் போடுறதுனு செய்றோம்.

முதல்ல எங்க பசங்க மூலமா உங்க கிராமத்துக்கு நாங்க கதை சொல்ல வர்றோம்னு சொல்லிடுவோம். ஏற்கனவே, பள்ளியில் ஒரு கதை மூலம்தான் வகுப்புகளை எடுக்குறோம். இதனால, பசங்களுக்கு நாங்க எப்படி கதை சொல்லுவோம்னு தெரியும். அங்க போகும்போது மற்ற பசங்களையும் அழைச்சிட்டு வருவாங்க. நாற்பது முதல் ஐம்பது மாணவர்கள் வரை திரள்வாங்க. எங்க பசங்க இருபது பேர்னா, மற்ற பசங்க இருபது பேர் இருப்பாங்க. முதல்தடவை நான் மட்டும் தனியா போய் இந்தக் கதை சொல்லி பணியைச் செய்தேன். அப்புறம், என்னுடைய பள்ளித் தலைவர் சுரேந்திரன் பாபும் இணைஞ்சார். அடுத்து நான்கு ஆசிரியைகள் நாங்களும் வரலாமா சார்னு கேட்டு வந்தாங்க. அப்புறம், இன்னொரு ஆறு ஆசிரியைகள் வந்தாங்க. என்னுடன் பத்து ஆசிரியைகள் இணைஞ்சு இந்த கதை சொல்லி பணியைச் செய்திட்டு வர்றோம்.  இதுல குழந்தைகளைப் பக்கத்துல இருக்கிற நூலகத்துக்கு அழைச்சிட்டுப் போய் வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துவோம். நேரடியா, நூலகத்திற்குக் கூட்டிட்டுப் போய் அங்க உறுப்பினரா சேர நானே பணமும் கட்டிடுவேன். பனையூர் நூலகம், மேலஅனுப்பானடி நூலகம், மேலமடை நூலகம், வண்டியூர் நூலகம் எல்லாம் எங்களுக்குப் பழக்கமாச்சு. அங்குள்ள நூலகர்கள் நெருக்கமாகி நல்லா ஒத்துழைப்பு தந்தாங்க. அப்புறம், கிராமங்கள்ல குழந்தைகளை வச்சு வீதி நாடகம் போட்டோம். இந்தக் கொரோனா லாக்டவுன் போடும் முன்பே கடந்த ஜனவரி மாசம் கொரோனா குறித்த விழிப்புணர்வை வீதி நாடகம் மூலம் ஏற்படுத்தினோம். இந்தமாதிரியான அனுபவங்கள் எல்லாம் இந்நேரம் எங்களுக்குக் கைக் கொடுத்துச்சு. நாங்க கதை சொல்லும்போது பெற்றோரும் வந்திடுவாங்க. அவங்களுக்கும் எங்களுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டுச்சு. அவங்கள்ல சிலர் ‘இந்தக் கொரோனா நேரத்துல வந்து கதை சொல்லலாமே சார்’னு முன்னாடி சொல்லியிருந்தாங்க. அதனால, எங்க ஆசிரியைகள்கிட்ட கேட்டேன்.

‘கொரோனா நேரமா இருக்கு. விருப்பப்பட்டவங்க வரலாம்’னேன். எல்லோருமே விருப்பம் தெரிவிச்சாங்க. அப்பதான் கதையுடன் பள்ளிக்கூடத்தையும் சேர்த்து நடத்துவோம்னு தீர்மானிச்சோம். சிந்தாமணி, பனையூர், அனுப்பானடி, பால்பண்ணை, மேலமடை, வண்டியூர், கருப்புபிள்ளையேந்தல், அன்பகசாலை, எல்.கே.பி. நகர், சக்கிமங்கலம் உள்ளிட்ட 11 பகுதிகள்ல தொடர்ந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை போறதுனு முடிவெடுத்தோம். இதை வீதி பள்ளிக்கூடம்னு சொல்லலாம். ஒவ்வொரு ஏரியாவுக்கும் போனோம். ஏற்கனவே, கதை சொல்லி அனுபவம் இருக்கிறதால மாணவர்களும் முன்புபோலவே வந்தாங்க. இதுவும் எங்க மாணவர்களுக்காக செய்ய திட்டமிட்டதுதான். ஆனாலும் அந்தப் பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் உட்பட எல்லா மாணவர்களுமே ஆர்வமாகி வகுப்புக்கு வந்தாங்க. இப்ப எல்லோருக்கும் வகுப்பு எடுக்கறோம்...’’ கண்கள் மின்ன சொன்ன சரவணன், தொடர்ந்தார். ‘‘நானும், பத்து ஆசிரியைகளும் வகுப்புவாரியா குழந்தைகளைப் பிரித்து பாடங்கள் நடத்துவோம். அப்படியே பள்ளி மாதிரிதான். என்ன அங்க வகுப்பறை இருக்கும். இங்க மரத்தடியும், வீட்டுத் திண்ணைகளும்தான் வகுப்பறை. ஒரு வகுப்புக்கு ஐந்தாறு குழந்தைகள் இருப்பாங்க. ஒவ்வொரு பகுதிக்கும் முதல்ல போனதும் குழந்தைகளின் பெற்றோரையும், பகுதி கவுன்சிலரையும் சந்திச்சு ‘இந்த மாதிரி வகுப்பு எடுக்கலாம்னு இருக்கோம். ஆதரவு கொடுங்க’னு சொல்லிட்டுதான் செய்றோம். சில நேரங்கள்ல காவல்துறையினரும் வருவாங்க. அவங்க பார்த்திட்டு ‘நல்லதுதான் செய்றீங்க. இருந்தும் கூட்டம் கூடாமல் பார்த்துக்கோங்க’னு சொல்வாங்க. நாங்க முதல்ல போகும்போதே குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்னு உறுதியானோம். அதனால, சானிடைசர், மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் மூணையும் கொண்டு போயிடுவோம். முதல்ல எங்க ஆசிரியைகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பத்தை பரிசோதிப்போம்.

அப்புறம், குழந்தைகளுக்கு பரிசோதிப்போம். கையில் சானிடைசர் கொடுத்து சுத்தம் செய்ய சொல்லுவோம். மாஸ்க் அணியாத குழந்தைகளுக்கு மாஸ்க் கொடுப்போம். அரசு சொன்ன சமூக இடைவெளியுடன் வகுப்பு களை எடுப்போம். ஓர் ஆசிரியருக்கு மூணு அல்லது நான்கு குழந்தைகள்தான். முதல்ல உடற்பயிற்சியும், யோகாவும் சொல்லித் தருவோம். அப்புறம், கை கழுவும் முறையை சொல்லித் தருவோம். எப்படி சுத்தமா இருக்கணும்னு சொல்வோம். அப்புறம்தான் பாடத்துக்குள்ள போவோம். ஒண்ணு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடங்கள் எல்லாம் பொதுவாதான் இருக்கும். இப்ப அறிவியல்னு எடுத்தா ஒண்ணு முதல் மூன்றாம் வகுப்பு வரை உடல் வெளியுறுப்புகள் பற்றியும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு உடல் உள்ளுறுப்புகள் பற்றியும் இருக்கும். பொதுத் தன்மையை முதல்ல சொல்லிட்டு அப்புறம் வகுப்புகளைப் பிரிச்சிடுவோம். ஆகஸ்ட்ல ஆரம்பிச்சு இப்ப வரை இந்தப் பயணம் போயிட்டு இருக்கு. ஆரம்பத்துல ரெண்டு நாளைக்கு ஒரு பகுதினு போனோம். இப்ப ஆறாறு பேர்களாக பிரிஞ்சு எல்லாரும் ஒரு பகுதிக்குனு தினமும் போக ஆரம்பிச்சிட்டோம். காலையில் எட்டு மணிக்கு போவோம். அப்பதான் குழந்தைகளை 9 மணிக்குள்ள ஆஜர்படுத்த முடியும். பிறகு, பதினோரு மணி வரை வகுப்புகள் போகும். அப்புறம், ஒரு மணி வரை ஏதாவது செயல்பாடுகள் இருக்கும். இப்ப குழந்தைகளின் பெற்றோரும், அந்தப் பகுதிக்காரர்களும் ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க. எங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்குறாங்க...’’ நெகிழும் சரவணன் குழந்தைகளுக்காக நாவல், சிறுகதைகள் எல்லாம் எழுதியிருக்கிறார்.  

‘‘நாங்க எங்க பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம் வச்சிருக்கோம். தவிர, நான் ‘நூல்வனம்’னு ஓர் அமைப்பும் நடத்திட்டு வர்றேன். அதன்வழியா நிதியுதவிகள் பெற்று அரசுப் பள்ளிகளுக்கு நிறைய நூல்கள் வழங்கிட்டு வர்றேன். இந்த வருடம் மட்டும் 3 ஆயிரம் புத்தகங்கள் வாங்கி வச்சிருக்கேன். பள்ளியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கு. எல்லாமே குழந்தைகளுக்கான புத்தகங்கள். ‘சார்ஜா கிரீன் குளோப்’னு ஓர் அமைப்பு இருக்கு. அதிலிருந்து நிதியுதவி வாங்குறோம். அங்க ஜாஸ்மின் என்பவர் எங்க கொடையாளரா இருக்காங்க. எப்பெல்லாம் அவங்க இந்தியா வர்றாங்களோ அப்பெல்லாம் பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பாங்க. அதை எங்க பள்ளிக்கும் மற்ற அரசு பள்ளிகளுக்கும் வழங்கறேன். தவிர நான் நாவல், சிறுகதைனு குழந்தைகளுக்கான 14 புத்தகங்கள் எழுதியிருக்கேன். ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டிருக்கு. இந்த வீதி பள்ளிக்கூடம் சிறப்பா நடக்க நான் மட்டுமே காரணமில்ல. என்னுடைய ஆசிரியைகளின் ஒத்துழைப்பும் பள்ளி நிர்வாகமும்தான் காரணம். அவங்களாலதான் இதை சாத்தியப்படுத்த முடிஞ்சது. பள்ளி திறக்கற வரை இந்த வீதி பள்ளியைத் தொடர்ந்து செய்வோம்...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் சரவணன்.

தொகுப்பு: பேராச்சி கண்ணன்

Tags : Street school ,places ,Corona ,elementary school teachers , 11th place, street school, corona period, elementary school teacher
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்