×

பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: மோடி, ராகுல் 3ம் கட்ட பிரச்சாரத்தில் தீவிரம்

பாட்னா: பீகாரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் 3ம் கட்ட தேர்தலுக்காக இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பீகார் சட்டமன்றத்துக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுகளில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி பிரசாத் யாதவ், இவரது சகோதரர் தேஜ் பிரதாப், நான்கு மாநில அமைச்சர்கள் என 1,316 ஆண்கள், 146 பெண்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலின வேட்பாளர் என 1,463 பேர் களத்தில் உள்ளனர். இன்றைய வாக்குப்பதிவில் 2 கோடியே 86,11,164 பேர் தங்கள் வாக்கு உரிமையைப் பயன்படுத்துகிறார்கள். பாட்னாவின் திகாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் வாக்குச்சாவடியில், மாநில ஆளுநர் பாகு சவுகான் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

பாட்னாவின் ராஜேந்திர நகரில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வாக்களித்தார். கஹரியா வாக்குச்சாவடியில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் மற்றும் அவரது சகோதரர் ராஜ் ஆகியோர் வாக்களித்தனர். இதற்கிடையே சிவானின் ஜசுலி பஞ்சாயத்தின் பூத் எண் 266ல் ஏற்பட்ட வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் 15 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல், தர்பங்கா மற்றும் கோபால்கஞ்சில், வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக சில மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வரும் 7ம் தேதி நடக்கவுள்ள 3ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று மேற்கொண்டனர். அரேரியா மாவட்டத்தில் உள்ள போர்பெஸ்கஞ்ச் மற்றும் சஹர்சா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

கதிஹார் மற்றும் கிஷன்கஞ்சில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். நாளை மாதேபுரா மாவட்டம் மற்றும் அரேரியாவில் உள்ள பீகாரிகஞ்சில் நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பிரசாரம் செய்கிறார். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி பிரதமரின் பயண திட்டத்திற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் வரும் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அப்போது, மீண்டும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி தொடருமா? அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது தனித்து போட்டியிடும் லோக் ஜனசக்தியின் ஆதரவுடன் தேர்தலுக்கு பிந்தைய ‘மாயாஜால’ கூட்டணி ஆட்சி அமையுமா? என்பது தெரிந்துவிடும்.

சவுகான் ஆட்சி தப்புமா?
மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகள், குஜராத் 8, உத்தர பிரதேசம் 7, கர்நாடகா 2, ஒடிசா 2, ஜார்க்கண்ட் 2, நாகலாந்து 2, தெலங்கானா, அரியானா, சட்டீஸ்கரில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், அக்கட்சி 9 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதேசமயம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமானால் இடைத்தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

இதனால் மத்திய பிரதேச இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்ததாக, உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும்நிலையில், இன்று நடக்கும் வாக்குப்பதிவு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

Tags : phase ,Bihar ,Modi ,phase campaign ,Rahul , 2nd phase of polls in Bihar intensifies: Modi, Rahul intensify 3rd phase of campaigning
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்