×

ரூ.2300 கோடியில் தயாரிக்கப்பட்ட கல்லணை கால்வாய் திட்டம்: கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

அறந்தாங்கி: காவிரி டெல்டாவில் 2.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தடையின்றி பாசன வசதி அளிக்கும் வகையில், ரூ.2300 கோடியில் தயாரிக்கப்பட்ட கல்லணை கால்வாய் திட்டம் கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மன்னர்கள் காலத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தவும், நெற்களஞ்கிய மாவட்டமான தஞ்சாவூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு காவிரி நீரை பயன்படுத்தவும், சோழமன்னன் கரிகாலன் பூதலூர் அருகே தோகூர்-கோவிலடி கிராமத்தில் கல்லணையை கட்டினார். பின்னர், ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் காவிரி பாசன தனி பொறியாளராக நியமிக்கப்பட்ட சர்ஆர்தர்காட்டன் என்ற பொறியாளர், கல்லணையில் தேங்கும் காவிரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்த ஒரு திட்டத்தை தயாரித்தார்.

அந்த திட்டத்தின்படி, புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 1931-ம் ஆண்டு தொடங்கியது. பல்வேறு நிலைகளில் அமைக்கப்பட்ட கல்லணைக் கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து 17 ஆண்டுகள் நடைபெற்று 1948ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் மும்பாலையுடன் நிறைவடைந்தது. கல்லணையில் இருந்து 148.65 தூரத்திற்கு அமைக்கப்பட்ட கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் ஒரு பகுதியும் பாசன வசதி பெறுகின்றன. கல்லணை கால்வாயில் வரும் காவிரி நீரை சேமித்து வைத்து பயன்படுத்த 694 ஏரிகள் உள்ளன.

கல்லணையில் இருந்து வினாடிக்கு 4200 கனஅடி திறந்தால் தாங்கும் வகையில் கால்வாயின் கரைகள் அமைக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் 4000 கன அடிக்கு மேல் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் முக்கிய பிரிவு வாய்க்கால்களான நெய்வாசல் தென்பாதி வாய்க்கால், வி.டி.வாய்க்கால், கல்யாணஓடை, ராஜாமடம், அலிவலம் வாய்க்கால், நடுவிக்கோட்டை வாய்க்கால், காயாவூர் வாய்க்கால், பண்ணவயல் மெயின்வாய்க்கால், புதுப்பட்டினம் மெயின்வாய்க்கால், சேதுபாவாசத்திரம் வாய்க்கால், ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால், கழனிவாசல்வாய்க்கால், பின்னவாசல்வடபாதி வாய்க்கால், பின்னவாசல் தென்பாதி வாய்க்கால், அனவயல் வாய்க்கால், அம்மணிசத்திரம் வாய்க்கால், திருவப்பாடிவாய்க்கால், கலக்கமங்கலம் வாய்க்கால், சிறுமருதூர் வாய்க்கால் போன்றவற்றிற்கு தண்ணீரை பிரித்து வழங்கி, மணமேல்குடி அருகே மும்பாலை வரை பாசனத்திற்கு தேவையான தண்ணீரை வந்தது.

கல்லணைக் கால்வாய் நாளடைவில் முறையாக பராமரிக்காத நிலையில், கல்லணைக் கால்வாயில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2500 முதல் 3000 கனஅடி வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடிவதால் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேராமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. தற்போது, மேட்டூர் அணையில் தண்ணீர் 100 அடியில் தொடர்ந்து இருந்தபோதிலும், புதுக்கோட்டை மாவட்ட காவிரிப் பாசன பகுதிக்கு முறையாக தண்ணீர் வந்து சேராததால் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பிரச்னைக்கு கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய்க்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும். இந்நிலையில் கல்லணைக் கால்வாய் பாசன வாய்க்கால், பிரிவு வாய்க்கால்கள், தண்ணீர் வழங்கு வாய்க்கால்களை தூர்வாரவும், ஏரிகளின் கரைகளில் சாத்துக்கற்கள் அமைக்கவும், நீர் ஒழுங்கிகள், உபரி நீர் போக்கிகள், ஏரிகள், மடைகள் போன்றவற்றை சீரமைத்து, கட்டுமானங்களை மேற்கொள்ளவும், ரூ.2300 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. தமிழக அரசு கல்லணைக் கால்வாயை சீரமைக்க தயாரித்துள்ள திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து, அதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒருபகுதி விவசாயிகளை மகிழ்வித்ததுபோல, கல்லணைக் கால்வாயை சீரமைத்து மாவட்டத்தின் மற்றொரு பகுதி விவசாயிகளையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே காவிரி கடைமடை பகுதி விவசாயிகளின் கோரிக்கை என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ெதரிவித்துள்ளனர்.

இதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவர் கண்ணன் கூறியதாவது: கல்லணைக் கால்வாயை முறையாக பராமரித்து, வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் திறந்தால், 149 கி.மீ தூரமுள்ள மும்பாலை வரை நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் எந்தவித தடங்கலும் இல்லாமல் சென்று சேரும். ஆனால் தற்போது கல்லணைக் கால்வாயின் கரைகள் வலுவிழந்துள்ளதாலும், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கல்லணையில் இருந்து குறைவான அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது. வழக்கமான அளவு தண்ணீர் திறந்தால், நாகுடி தலைப்பிற்கு குறைந்தது வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக வினாடிக்கு 170 கனஅடி தண்ணீரே வந்துள்ளது.

தமிழக முதல்வர் புதுக்கோட்டைக்கு வந்த போது தஞ்சாவூர் பகுதிக்கு சென்ற தண்ணீரை நிறுத்திவிட்டு தற்போது 190 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நாகுடியில் இருந்து கல்லணை வரை ஒரு ஆய்வை மேற்கொண்டோம். அப்போது கல்லணைக் கால்வாய் மேடும், பள்ளமுமாக பல இடங்களில் உள்ளது. கரைகளும் பல இடங்களில் பலமிழந்து உள்ளது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால், கல்லணைக் கால்வாயை தூர்வார வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kallanai , Aranthangi, Fort Canal Project
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...