×

ஆறு, வாய்க்காலில் நீர் வரத்து குறைந்ததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

கீழ்வேளூர்: கீழ்வேளூர் அடுத்த கொடியலத்தூர் பாசன வாய்க்காலில் போதிய தண்ணீர் வராததால் சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்யாததாலும், ஆற்றில் நீர் வரத்து குறைந்ததாலும் சம்பா வயல்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பல இடங்களில் பயிர்கள் கருகி வருகிறது.கீழ்வேளூரை அடுத்த கொடியாலத்தூர் ஊராட்சி உக்கடை, வடக்குவெளி, மேலவெளி, தெற்குவெளி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 500 ஏக்கர் நிலங்கள் கொடியாலத்தூர் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது.

கொடியாலத்தூர் வாய்க்காலுக்கு வெள்ளையாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. வெள்ளையாற்றை தூர்வாரியபோது, கொடியாலத்தூர் வாய்க்காலுக்கு தண்ணீர் வாய்க்கால் தலைப்பில் உள்ள கீழ் குமிழி துவாரத்தின் அளவு பாதியாக குறைக்கப்பட்டது. இதனால் 500 ஏக்கர் சம்பா வயலுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. வாய்க்கால்களில் குறைந்த அளவே தண்ணீர் வருவதாலும், மழை பெய்யாததாலும் சம்பா வயல் வறண்டு வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகி வருகிறது. இதையடுத்து விவசாயிகள் கொடியலத்தூர் வாய்க்கால் 7 கிலோ மீட்டர் தூரத்தையும் முழுமையாக பழைய அளவில் வாய்க்காலை தூர் வர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், பயிர் கருகும் நிலையில் உள்ள நிலத்தில் இறங்கி கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

Tags : drought ,canal , Paddy crops, water supply
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...