மின்வாரிய சங்கத்தினர் நாளை போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சங்கராபுரம், சமயநல்லூர், சென்னை மின்வாரிய தலைமையகம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை மின்நிலையங்களை இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்கவும், இயக்கவும் தனியாருக்கு விடுவதற்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மின்பாதையை பராமரிக்க டெண்டர்விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் துணை மின்நிலையங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்துறையில் உள்ள 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நியாயமான ஊதியத்துடன், நிரந்த வேலைவாய்ப்பு வழங்காமல் இளைஞர்களின் கனவு பறிபோகிறது.

புதிய உற்பத்தி திட்டங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிட மின்வாரிய பணியாளர்களை ஒதுக்கி விட்டு, அப்பணி தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து வரும் 4ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தை நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பும், அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பாகவும் இந்த தர்ணா போராட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>