ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ரகானே, சாம்ஸ், அக்சர் இடம்பெற்றனர். ஆர்சிபி அணியில் குர்கீரத், சைனிக்கு பதிலாக துபே, ஷாபாஸ் சேர்க்கப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யலாம் என்பதால், இரு அணிகளுமே மிகுந்த முனைப்புடன் களமிறங்கின.

பிலிப், படிக்கல் இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். பிலிப் 12 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் ஷா வசம் பிடிபட்டார். அடுத்து படிக்கல் - கேப்டன் கோஹ்லி ஜோடி பொறுப்புடன் விளையாடி 57 ரன் சேர்த்தது. கோஹ்லி 29 ரன் எடுத்து (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) அஷ்வின் சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து படிக்கல்லுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயன்றனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. 40 பந்தில் அரை சதம் அடித்த படிக்கல் (5 பவுண்டரி), சிக்சர் விளாச ஆசைப்பட்டு நார்ட்ஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். துபே 17 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), டி வில்லியர்ஸ் 35 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 2 சிச்கர்) விளாசி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

உடனா 4 ரன்னில் வெளியேற, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி அணி 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஷா 9 ரன்னில் ஆவுட் ஆனார். பின்னர் அவருடன் ஜோடி சேர்ந்தார் ரகானே. இருவரும் பெங்களூர் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இதில் தவான் 54, ரகானோ 60 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் ரிஷப் வின்னிங் ஷாட் அடித்தார். இதனால் 19 ஓவர் முடிவில் 154 ரன் எடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

Related Stories:

>