×

விஜய் மல்லையா நாடு கடத்தல் வழக்கு: 6 வாரத்தில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் உள்ள தற்போதைய நிலை குறித்து 6 வாரங்களில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் ₹9ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று அந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை நாடு கடத்துவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மல்லையா அனைத்து வழக்கிலும் தோல்வி அடைந்தார். இதனால், சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு 28 நாளில் அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என கூறப்பட்டது.

ஆனால், பல மாதமாகியும் அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே, மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ‘மல்லையா மீது இங்கிலாந்தில் ரகசிய சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றது.  இது நாடு கடத்தல் நடவடிக்கைகளை தாண்டிய தனி நடவடிக்கைகள் என்றும் இது முடியும் வரை அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படமாட்டார்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் யூ யூ லலித் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகர்வாலா, வழக்கில் இருந்து மல்லையாவை விடுவிக்க வேண்டும் என கோரினார். நீதிபதிகள் அமர்வு இதனை ஏற்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான இங்கிலாந்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் நிலை குறித்து 6 வாரங்களில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Vijay Mallya Deportation Case: Supreme Court , Vijay Mallya Deportation Case: Supreme Court orders report quality within 6 weeks
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்