×

ஷார்ஜாவில் இன்று கடைசி லீக் ஆட்டம் மும்பை இந்தியன்சுடன் சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முனைப்பு

ஷார்ஜா: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தனது கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் இன்று மோதுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப். 19ம் தேதி தொடங்கிய லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. 56வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்ததுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் லீக் சுற்றுடன் மூட்டைகட்டிய நிலையில், சன்ரைசர்ஸ் அணி மும்பையை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம்.

ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 8 முறை மும்பையும், 7 முறை ஐதராபாத்தும் வென்றுள்ளன. இந்த அணிகளும் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் தலா 5 வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. நடப்புத் தொடரில் அக். 4ம் தேதி நடந்த லீக் போட்டியில் மும்பை அணி 34 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது. இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி பதிலடி கொடுத்தால், பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக முன்னேறி விடும்.   

அது 4வது அல்லது 3வது இடமாகவும் இருக்கலாம். டெல்லி - பெங்களூர் போட்டிக்கு முன்பாக, 5வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணியின் ரன் ரேட் +0.555. அதற்கு மேல் 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா உள்ளிட்ட அணிகளின் ரன்ரேட் மைனசில். அதனால் ஐதராபாத்தின் வெற்றியை 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா மட்டுமல்ல, பெங்களூர்-டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தோற்ற அணியும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கும். ஒருவேளை மும்பை வெற்றி பெற்றால் முதல் 4 இடங்களில் உள்ள மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றில் களம் காணும்.

Tags : Sunrisers ,league match ,Mumbai Indians ,Sharjah ,round , Sunrisers take on Mumbai Indians in last league match in Sharjah today: Advancing to play-off round
× RELATED இந்த போட்டியில் சில அற்புதமான...