×

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த தடபெரும்பக்கம் என்.எஸ்.சி.போஸ் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(50). விவசாயி. இவருக்கு கடந்த தினங்களாக விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. பின்னர் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 55 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உற்சாகத்தோடு தங்களது உள்ளாட்சி பணிகளை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில் ஆங்காங்கே கழிவுநீர், மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். எனவே, உடனடியாக மீஞ்சூர் ஒன்றியம் முழுவதும் உள்ள கிராம பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்தி சுகாதாரத்துறையினர் தீவிர டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Minsur Panchayat Union , Rapidly spreading dengue fever in Minsur Panchayat Union
× RELATED மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனை கூட்டம்