×

ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, தீபக்குக்கு பாதுகாப்பு வேண்டுமா? சென்னை போலீஸ் கடிதம் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் தாங்கள் தான் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் சட்டப்பூர்வ வாரிசுதாரர் என்றும் வாதிட்டனர். வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

அதே நேரத்தில், ஜெயலலிதாவின் ரூ.188 கோடி மதிப்பிலான மற்ற சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்கள் சட்டபூர்வ வாரிசுதாரர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு அவர்களின் சொந்த செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே தீபா, தீபக் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதை போல சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவர்களது அத்தையான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளையாக தோற்றுவித்து அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வக்கீல் தனக்கும், தனது அக்கா தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா என்று கேட்டு சென்னை போலீசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கோரப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரலும் கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : heirs ,Jayalalithaa ,J Deepa ,Deepak ,hearing ,Chennai , Jayalalithaa's heirs J Deepa, does Deepak need protection? Chennai police letter adjourned hearing
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...