×

ஊழல் டெண்டரில் கவனம் செலுத்துவதை கைவிட்டு விலை உயர்வை தடுத்து மக்களை காக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜ அரசு, எதிர்ப்புகளுக்கிடையேயும் நிறைவேற்றி இருக்கும் 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் காரிருள் சூழ வைத்துள்ளது. இந்த வேளாண் சட்டங்களினாலும், அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ள எடப்பாடி அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையாலும், தீபாவளி  பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் பருப்பு விலை 25 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்தது.

சமையல் எண்ணெய் விலை உயர்ந்து இன்றும் தொடருகிறது. வெங்காய விலையோ கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. பிறகு வெங்காய விலை இறங்குமுகமாகி இப்போது உருளைக்கிழங்கு விலை ஏறுமுகமாகி விட்டது. ஒரு கிலோவிற்கு 25 முதல் 60 ரூபாய் வரை அதிகரித்து, இன்றைக்கு உருளைக்கிழங்கையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியச் சந்தை வந்து விட்டது. வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக் கிழங்கு, காய்கறிகள், என அனைத்துப் பொருட்களும், இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தாராளமாகக் கிடைப்பது செயற்கையாக தடுக்கப்பட்டு விட்டது.

எனவே, தீபாவளிப் பண்டிகை நேரத்தில் சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் தடுக்க மத்திய பாஜ அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி ஊழல் டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துவதைக் கைவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரளா அரசு போல் ‘காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்’ செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிமுக அரசு உடனே சட்டம் கொண்டு வரவில்லையென்றால் விரைவில் மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைக்கப்போகும் திமுக, கேரள மாநில அரசு கொண்டு வந்திருப்பது போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரும் என்றும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க தடைவிதித்தது வேதனை அளிக்கிறது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்: கொரானா தொற்றைக் காரணம் காட்டி பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு தடை போட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இந்தப் பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு துயரம் மிகுந்த சூழலில், தீபாவளிப் பண்டிகைதான் அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறது. ஆனால் அந்தப் பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று போடப்பட்டுள்ள இந்தத் தடை ஒட்டுமொத்த பட்டாசு தொழிலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசு வெடிக்க விதித்திருக்கும் தடையை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் திரும்பப் பெற வேண்டும்.

Tags : MK Stalin , MK Stalin urges PM to stop focusing on corrupt tenders and protect people from rising prices
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...