×

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளிடம் தென்காசி பைனான்சியர் ரூ.30 கோடி சுருட்டியது எப்படி?.... பரபரப்பு பின்னணி தகவல்கள்

கேடிசி நகர்: வெளிநாட்டு நிறுவன பங்குச் சந்தையில் முதலீடு ஆசை காட்டி ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்டு கைதான நிதி நிறுவன உரிமையாளர் மயில்வாகனன், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை தனது வலையில் வீழ்த்தியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை சந்திப்பு, பாலபாக்யா நகரைச் சேர்ந்தவர் எடிசன் (54). இவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘‘பாளை முருகன்குறிச்சியில் இயங்கும் ஒரு நிதி நிறுவனம், தங்களிடம் பணம் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் பணம் பெற்றுத் தருவோம் என அறிவித்தது. இதை நம்பி எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வசூலித்த ரூ.10 கோடியை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் எங்களுக்கு உறுதியளித்தபடி அதிக பணம் தரவில்லை. இதுகுறித்து நிறுவனம் சார்பில் திருப்தியான பதில் தரவில்லை.’’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம். தாமோர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜூ, இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தென்காசி மாவட்டம், இலத்தூர் குத்துக்கல்வலசை வேம்பார் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மயில்வாகனன் (38) என்பவரை கைது செய்து, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உமாபார்வதி, மைத்துனர் சிவசுந்தர் (42) ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் மீது பணமோசடி, கூட்டுசதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இந்திய மதிப்பில் செலுத்தும் பணத்தை வெளிநாட்டு பணத்தின் மதிப்பில் மாற்றி பங்குசந்தையில் முதலீடு செய்து, அதிக வருவாய் பெற்றுத் தருவதாகக் கூறி மயில்வாகனன் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

அவர் மோசடி செய்தது பற்றி போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கூறப்படுவதாவது: தென்காசி மாவட்டம், இலத்தூரை அடுத்த குத்துக்கல்வலசை, வேம்பார் நகரைச் சேர்ந்தவர் மயில்வாகனன் (38). இவரது தந்தை ஆறுமுகம் போலீசில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தாய் உமாபார்வதி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. இவர் மீது தென்காசி போலீஸ் ஸ்டேஷன்களில் பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எம்பிஏ படித்த மயில்வாகனன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய பொதுமக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி விளம்பரம் செய்துள்ளார். அதில், ‘‘ஷேர் மார்க்கெட்டிங், டிரேடிங், பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் 40 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறலாம்.’’ என்று தூண்டில் போட்டுள்ளார்.

மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 15 நாட்களில் ரூ.40 ஆயிரம் தருகிறோம் என்று கூறியுள்ளார். இதை நம்பி தென்காசி, கடையநல்லூர், நெல்லை, கன்னியாகுமரி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து 100க்கும் ேமற்பட்டோர் லட்சம், லட்சமாக பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் யாருக்கும் உறுதியளித்தபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. ரூ.1 லட்சம் முதலீடு செய்த சிலருக்கு மாதா, மாதம் ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். 4 மாதங்கள் கொடுத்துவிட்டு நிறுத்தி விட்டார். பின்னர் அவர்கள் கேட்டதற்கு இன்னும் ரூ.60 ஆயிரம் போடுங்கள்; அப்போது தான் அந்த ஒரு லட்சத்தை எடுக்க முடியும் என்று கூறி மீதி பணத்தை வசூலித்துள்ளார்.
இவரிடம் பணம் போட்டவர்களில் பெரும்பான்மையானோர் பணம் வந்த வழியை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆவர்.

எனவே அவர்கள் ரொம்பவும் நெருக்கினால் அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறையில் புகார் செய்து விடுவேன் என்று மிரட்டி விடுவாராம். நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் போட்ட பணத்திற்கு ‘ரிட்டர்ன்’ இல்லையே என்று கேட்கும் போது வெளிநாட்டில் பங்குச்சந்தை தற்போது சரிந்துள்ளது. மீண்டும் சூடு பிடிக்கும் போது உங்களுக்கு இரட்டிப்பாக சேர்த்து தருகிறேன் என்று சமரசப்படுத்தியுள்ளார். மேலும் இவரது நிறுவனத்தில் வேலைக்கு எடுக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளமாக அளித்துள்ளார். அவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அவர்களிடம் அவர்களது உறவினர்கள், நண்பர்களிடம் ‘கேன்வாஸ்’ செய்து நிறுவனத்தில் முதலீடுகளை திரட்டும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் முதலீடுகளை திரட்டியுள்ளனர்.

இதுதவிர ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பை தொடங்கி வீட்டில் ஜல்லிக்கட்டு மாடு ஒன்றை வளர்த்துள்ளார். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள பல அமைப்புகளை தொடர்பு கொண்டு தனது நிறுவனத்தில் பல கோடிகளை முதலீடு செய்ய ஆதரவு திரட்டினார். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. இவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக ரூ.30 கோடி வரை மோசடி செய்துள்ள மயில்வாகனன் போலீசில், ‘‘ நான் எந்த காலத்திலும் பணம் கூடுதலாக தருவதாக உறுதி கொடுக்கவில்லை. பங்குச்சந்தை நிலையில்லாதது. அதில் லாபம் கிடைக்கும் போது உங்களுக்கு கிடைக்கும். நஷ்டம் வரும் போது அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.’’ என்று தான் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பல கோடி ஏமாந்த மூதாட்டி
கடையநல்லூரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் தனது இளம் வயதில் முஸ்லிம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து, தானும் முஸ்லிமாக மாறியுள்ளார். பின்னர் தான் பார்த்த ஆசிரியர் பணியை விட்டு விட்டு, கணவருடன் வெளிநாட்டில் வசித்துள்ளார். பின்னர் கணவருடன் கடையநல்லூருக்கு திரும்பிய போது தங்களின் சொத்துக்கள் அனைத்தையும் விற்று மயில்வாகனிடம் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவரிடம் ‘டிரேடிங்’ கீழிறங்கி விட்டது என்று கூறி அனைத்து பணத்தையும் ‘ஸ்வாகா’ செய்து விட்டார். கணவர் இறந்த நிலையில் அந்த பெண் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

ரவுடிகள் ஓட்டம்
மயில்வாகனன் தனது வீட்டை பல கோடி ரூபாய் செலவழித்து டிஜிட்டல் வீடாக மாற்றியுள்ளார். வெளியே காணப்படும் சிறு அசைவும் அவரது வீட்டின் டிவியில் தெரிந்து விடுவாம். வீட்டில் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு மாட்டை பராமரிக்கவும், காவலுக்காகவும் சில ரவுடிகளை பணியில் அமர்த்தியுள்ளார். நேற்று மயில்வாகனன் கைது செய்யப்பட்டதும், அந்த ரவுடிகள் எஸ்கேப்பாகி விட்டனர்.

Tags : Financier ,Tenkasi ,politicians , How Tenkasi Financier rolled over Rs 30 crore to businessmen and politicians?
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...