திருமங்கலம் அருகே பாண்டியர் காலத்து விநாயகர் கோயில் புனரமைக்கப்படுமா?... பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அடுத்த சிவரக்கோட்டையில் பாண்டியர் காலத்து விநாயகர் கோயிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது சிவரக்கோட்டை. விருதுநகர் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் புகழ்பெற்ற பாண்டியர் காலத்து விநாயகர் கோயில் உள்ளது. பாண்டியர் கோட்டை என்ற பெயர் பெற்ற இந்த கோட்டை நாளடைவில் மருவி தற்போது சிவரக்கோட்டையாக மாறியுள்ளதாக கிராமத்து பெரியவர்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இரண்டு ஆறுகள் அதாவது கமண்டலநதி, குண்டாறு சந்திக்கும் இடத்தில் இந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளதாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கல்வெட்டில் பாண்டிய மன்னரால் வடிவமைக்கப்பட்ட கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவறையில் அமைந்துள்ள விநாயகர் சிலை வயிற்றுப்பகுதியில் குட்டிவிநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலின் தனிச்சிறப்பாகும். கடன் தொல்லை, நோய்நொடிகளிலிருந்து விடுபட்டு விமோசம் பெற இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பக்தர்கள் திருக்கோயிலில் உள்ள கிணற்று நீரால் உடலை நனைத்த பின்பு விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அருகேயுள்ள குழாயில் தண்ணீர் பிடித்து உடலை நனைத்து உள்ளே சென்று வருகின்றனர். கோயிலின் மேற்புறசுவர்களில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன் வடிவங்கள் அமைந்துள்ளன.

புராதான காலத்து கோயிலான இந்த கோட்டை விநாயகர் கோயிலை தமிழக அரசு புனரமைத்து பராமரித்தால் பழமை மாறாத இந்த கோயிலின் புகழ் மேன்மேலும் பரவும் என்பதே பக்தர்களின் எண்ணமாகும். சக்தி வாய்ந்த கோட்டை விநாயகரை தரிசிக்க மதுரை மட்டுமின்றி விருதுநகர், தேனி, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>