×

என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு டிராவிட் சார்தான் காரணம்..!! மும்பை வீரர் இஷான் கிஷன் புகழாரம்

அபுதாபி: ஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திவருகிறது. பிளே ஆஃபிற்கு முதல் அணியாக தகுதிபெற்றது மும்பை இந்தியன்ஸ். 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அபாரமாக செயல்படுவதுடன், எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்திருக்காததுதான் அந்த அணியின் பலமே. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டி காக், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, போல்ட் என அனைவரும் சிறப்பாக ஆடுகின்றனர். ரோஹித் சர்மா இல்லாமலேயே அந்த அணி அசத்திவருகிறது.

மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைவிட இந்த சீசன் அவருக்கு சிறந்த சீசனாக அமைந்துள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களை குவித்த இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆடாததால் கடந்த சில போட்டிகளாக டி காக்குடன் தொடக்க வீரராக இறங்கி ஆடிவருகிறார். தொடக்க வீரராக அபாரமாக ஆடிவரும் இஷான் கிஷன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி 47 பந்தில் 72 ரன்களை குவித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்நிலையில், தனது பேட்டிங் மேம்பட்டிருப்பது குறித்து பேசிய இஷான் கிஷன், நான் அதிகமாக லெக் திசையில் தான் ஷாட்டுகளை ஆடிக்கொண்டிருந்தேன்.

எனது பயிற்சியாளர்கள் ஆஃப் திசையில் அடித்து ஆட வேண்டியது அவசியம் என்றனர். ஆனால் ஆரம்பத்தில் நான் ஆஃப் திசையில் ஆடமாட்டேன். அது எனது பலமும் அல்ல. ராகுல் டிராவிட் சார் தான் ஆஃப் திசையில் அடித்து ஆடி பழகுமாறு அறிவுறுத்தினார். அதன்பின்னர் ஆஃப் திசையில் ஆடி பயிற்சி செய்தேன். அதன் தாக்கம் ஆட்டத்தில் தெரிகிறது என்று டிராவிட்டுக்கு நன்றி தெரிவித்தார் இஷான் கிஷன். இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து, பிரித்வி ஷா, கில், மயன்க் அகர்வால், இஷான் கிஷன் உள்ளிட்ட பல இளம் திறமைகளை வளர்த்தெடுத்து, மெருகேற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dravid ,game ,Ishant Kishan ,Mumbai , Dravid is the reason for my great game .. !! Mumbai player Ishant Kishan praised
× RELATED 100வது டெஸ்டில் அவர் பேசியதை...