×

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வங்கியில் இருந்து சுமார் 9,000 கோடிக்கு மேலாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதனை தொடர்ந்து அவரை நாடு கடத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தன்னை நாடு கடத்த கூடாது என இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவானது விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

மேலும் 28 நாட்களுக்குள் அவர் நாடு கடத்தப்படலாம் என்று அந்த நீதிமன்றமானது தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அவர் ஒரு மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் அதே வேளையில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவரப்படவில்லை. இதனை அடுத்து இது தொடர்பாக ஒரு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் இருந்தது. குறிப்பாக விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அவர் வங்கி கணக்கில் இருந்த பணங்களை யாருக்கும் அனுப்ப கூடாது என்று உத்தரவு இருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி தன்னுடைய மகன் மற்றும் மகள்களுக்கு 40 million dollars-ஐ அவர் பரிவர்த்தனை செய்திருக்கிறார்.

இதனையடுத்து இது நீதிமன்ற அவமதிப்பு என்பதால் அவரை அக்.5-ம் தேதி 2 மணிக்கு ஆஜர் படுத்தும் படி ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் மல்லையா ஆஜராகவில்லை. அதனை தொடர்ந்து அக்.6-ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. குறிப்பாக ஏன் அவர் ஆஜராகவில்லை?, என்ன காரணங்களுக்காக அவர் இன்னும் இந்தியா அழைத்து வரப்படவில்லை, உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு; அங்குள்ள சட்ட நடைமுறைகள் இதுவரை முடிவடையவில்லை. நாடு கடத்தப்படலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அந்த நாட்டுக்கான சட்ட விதிகள் சில இருக்கின்றன. அவை முடிந்த பின்பு தான் அவர் நாடு கடத்தப்படுவார்.

அதற்கான ரகசிய ஆலோசனை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட இருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது;  விஜய் மல்லையா ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி இந்த அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கும் படி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவானது நிராகரிக்கப்பட்டது. அதேபோல விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வருவதற்காக எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர் ;தூதரகத்தில் நாங்கள் கேட்ட போது அங்கிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

ஏனெனில் ரகசிய நடவடிக்கைகள் என பல்வேறு நடவடிக்கைகள் அங்கு நடைபெற்று வருகிறது. எனவே அது தொடர்பாக விளக்கம் பெற்று தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். மேலும் 6 வாரம் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மத்திய அரசு ஒரு நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக விஜய் மல்லையா எப்போது நாடு கடத்தப்படுவார்? அதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையின் நிலை என்ன? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Tags : India ,Vijay Mallya ,Central Government ,Supreme Court , To what extent is the move to bring Vijay Mallya to India? ... Supreme Court question to the Central Government
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!