×

தனியார் பிராய்லர் நிறுவனங்களுக்கு எதிராக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்

திண்டுக்கல்: தமிழகத்தில் பிராய்லர் கோழி தனியார் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் கோழி பண்ணையாளர்களிடம் பிறந்து ஒரு நாளேயான கோழிக்குஞ்சை கொடுத்து அதற்கு தீவனம், மருந்து ஆகியவற்றைக் கொடுத்து வளர்க்க சொல்லுவார்கள். பிராய்லர் கோழி 45 நாட்களில் நன்கு வளர்ந்துவிடும். கோழியின் எடையைப் பொறுத்து இவர்களுக்கு கூலியாக ஒரு கிலோவிற்கு ரூ.4 முதல் ரூ. 6 வரை கடந்த 15 ஆண்டுகளாக பிராய்லர் கோழி நிறுவனங்கள் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் தற்ேபாது விலைவாசி உயர்ந்துள்ளதால் கூலியாக கிலோவிற்கு ரூ. 15 உயர்த்தி தரவேண்டும் என நிறுவனங்களிடம் பண்ணையாளர்கள் பலமுறை வலியுறுத்தினர்.

ஆனால், இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 800 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கூலி உயர்த்தி தரவில்லையென்றால் நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கிய வளர்த்த கோழியை திரும்ப தர மாட்டோம். பிராய்லர் கோழியை விற்பனைக்கு அனுப்பி வைக்க மாட்டோம். புதிதாக கோழியை வளர்ப்பதற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்க மாட்டோம் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 கோழி பண்ணைகளில் 20 லட்சம் கோழிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பிராய்லர் கோழி விற்பனையில் தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும் தற்போது கிலோ ரூ. 160 விற்கப்படும் கோழி விலை, நாளை முதல் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. அதனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்னைக்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Poultry farm owners ,broiler companies , Poultry farm
× RELATED பிராய்லர் கோழி வளர்ப்பு கூலி...