×

நாடு முழுவதும் 100 நகரங்களில் காஸ் சிலிண்டர் சப்ளைக்கு ஓடிபி முறை அமலானது

சேலம்: நாடு முழுவதும் 100 நகரங்களில் இண்டேன் காஸ் சிலிண்டர் சப்ளைக்கு, டிஏசி என்னும் ஓடிபி எண் முறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும், சிலிண்டர் புக்கிங் செய்ய புதிய தொலைபேசி எண்ணும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் விநியோகத்தை மேற்கொள்கின்றன. இந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் சிலிண்டர் பெறும்போது, மானியம் இன்றி பெற வேண்டும்.

ஹோட்டல், டீக்கடைகள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டிற்காக, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களும் சப்ளை செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர் சப்ளையில் முறைகேடுகளை தவிர்க்க ஐஓசிஎல் நிறுவனம் (இந்தியன் ஆயில்), விநியோக விதிகளில் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி காஸ் சிலிண்டர், சரியான வாடிக்கையாளருக்கு சென்றடையும் வகையில், டிஏசி என்னும் ஓடிபி எண் பெறும் திட்டம் நேற்று முதல் 100 நகரங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு பெயர்களில் சிலிண்டர் புக்கிங் செய்து, வாடிக்கையாளர்களை மாற்றி முறைகேடாக சப்ளை செய்யப்படுவதை தடுக்க இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். நுகர்வோர் விநியோக அங்கீகார குறியீடு (டிஏசி) என்ற ஓடிபி எண், காஸ் சிலிண்டர் புக்கிங் செய்த வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை சிலிண்டர் கொண்டு வரும் சப்ளையரிடம் கூறினால் தான், சிலிண்டரை வழங்குவார்.

இந்த புதிய முறை நேற்று முதல் 100 நகரங்களில் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் கோவை, சேலம் மாநகர பகுதியில் ஐஓசிஎல் நிறுவனம் சோதனை அடிப்படையில் இந்த ஓடிபி எண் பெறும் முறையை செயல்படுத்தியது. அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், தற்போது அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தை பொருத்தளவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மண்டலங்களிலும், சுமார் 20 மாவட்டத்தில் அமல்படுத்தியுள்ளனர்.

கோவை மேற்கு மண்டலத்தில், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களிலும் இண்டேன் சிலிண்டர் சப்ளைக்கு ஓடிபி எண் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நேற்றைய தினம், சிலிண்டர் வாங்கிய வாடிக்கையாளர்கள், அவர்களின் தொலைபேசிக்கு வந்த டிஏசி என்னும் ஓடிபி எண்ணை தெரிவித்து தான், சிலிண்டர்களை பெற்றுக் கொண்டனர். விரைவில் இத்திட்டத்தை நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு கொண்டு வரவும், இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்புதிய முறையில், காஸ் ஏஜென்சிகளில் முறையாக தொலைபேசி எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், சரியான முறையில் டவர் இல்லாத இடங்களில் ஓடிபி எண் கொண்ட குறுஞ்செய்தி, தொலைபேசிகளுக்கு சென்றடையாது. அதுவும் சிலிண்டர் சப்ளையில் பிரச்னையை ஏற்படுத்தும். முறைகேடுகளை தவிர்க்க கொண்டு வரப்படும் இத்திட்டம் நல்லது என்றாலும், சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அதனை ஐஓசிஎல் நிறுவனம் களைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இண்டேன் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணாக 77189-55555 நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த எண்ணில் தான், இனி சிலிண்டர் புக்கிங் செய்ய வேண்டும் என ஐஓசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : OTP ,country ,cities , Gas cylinder supply
× RELATED புழலில் கிரெடிட் கார்டு கடன் தொகையை...