×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியும் போதிய போக்குவரத்து வசதி இல்லை

வேலூர்: தமிழகத்தில் இயல்புநிலை திரும்பியும் போதுமான அளவுக்கு பொதுபோக்குவரத்து வசதி இல்லாததால், தமிழகம் மட்டுமின்றி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 90 சதவீதம் இயல்புநிலை திரும்பியுள்ளது. ஆனால் போதுமான போக்குவரத்து வசதியில்லாததால் பல்வேறு தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக அத்தியாவசிய ெபாருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், அவற்றின் விலை மேலும் உச்சம்தொட வாய்ப்புள்ளதாக பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் டவுன், விரைவு, அதிவிரைவு, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பஸ் சேவைகளில் 20 ஆயிரத்து 944 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 629 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 568 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், காட்பாடி வழியாக தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் சென்னை, பெங்களூரு, வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக வேலூர், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சென்னையில் வேலை செய்வதற்காக தினமும் ரயிலில் சென்று வந்தனர்.

இந்நிலையில், கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ், உலகை நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பஸ்கள், ரயில்கள், விமானம், மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் தமிழகத்தில் படிப்படியாக குறையத் தொடங்கியதும், ஊரடங்கில் பொதுபோக்குவரத்து தவிர பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

பொதுபோக்குவரத்து இயக்கப்படாததால், கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேலைக்கு வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. பஸ் வசதி இல்லாததால் கிராமப்புற மக்கள், பலரும் வேலையை விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு சிலர் வீட்டில் வைத்திருந்த நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் இருசக்கர வாகனங்களை வாங்கி வேலைக்கு சென்று வந்தனர். தினமும் பெட்ரோலுக்கு சம்பளத்தின் ஒரு பாதியை செலவு செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகினர்.

ஆனால் பொதுபோக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக சேவையினை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி அனுமதி வழங்கியது. அதன்படி, மாவட்டத்திற்குள்ளான பஸ் சேவை தொடங்கியது. இவ்வாறு அனுமதியளித்தும், பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், அரசு பஸ்களில் 30 சதவீதம் கூட வருவாய் கிடைக்கவில்லை. இதனால் போக்குவரத்து கழகம் காலை, மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கிராம பகுதிகளுக்கு பஸ்களை இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால், அத்தியாவசிய தேவைக்காக நகருக்கு வர நினைப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர், மாவட்டம், விட்டு மாவட்டம் பஸ்கள் இயக்கிய போது, பொதுமக்கள் அச்சம் தவிர்த்து பஸ்களில் பயணம் செய்ய முன்வந்தனர். ஆனால் பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் இருந்தது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக 100க்கும் குறைவாகவே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உள்ளது. ஆனாலும் 100 சதவீதம் பொதுபோக்குவரத்து தொடங்கவில்லை.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 80 சதவீதம் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும், 80 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 20 சதவீதம் பஸ்கள் கிராம பகுதிகளில் இயக்கப்படும் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு வருவதற்கு சரக்கு ஆட்டோக்கள், மினிவேன்கள் ஆகியவற்றில் கொண்டுவர வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, காட்பாடி வழியாக 100 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, சென்னை- கோவை இடையேயான இன்டர்சிட்டி ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராம பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நகர பகுதிகளுக்கு பணிக்கு வருகிறார்கள். அவர்கள், அலுவலகம், தொழிற்சாலை, கடை, நிறுவனங்கள், கட்டுமானபணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு போதுமான அளவு பஸ் வசதி இல்லாதது பெரும் சிக்கலையே ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக மக்கள் அரசு பஸ்களில் கூடுதல் செலவு செய்து வருகின்றனர். மேலும் ஷேர் ஆட்ேடாக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர். ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை தற்போது பயன்படுத்துவதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே, கொரோனாவால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு, இது மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் 100 சதவீதம் பொதுபோக்குவரத்து, ரயில் சேவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Tirupati ,Vellore ,districts ,Ranipettai ,Thiruvannamalai ,transport facilities , Transportation facility
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது