×

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய ரூ.3 கோடி மஞ்சள், போதைப்பொருள் பறிமுதல்

ராமேஸ்வரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தமாதம் 20 மற்றும் 31ம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மன்னார் வளைகுடா கடலில் புத்தளம் மற்றும் மன்னார் வங்காள கடலோர பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்டு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக 16 பேரை கைது செய்த கடற்படையினர் 2 படகு, ஒரு லாரி, டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதுபோல் பாக் ஜலசந்தி கடலில் தலைமன்னார், வல்வெட்டித்துறை, காரைநகர் கடலோர பகுதிகளில் ரோந்து சென்றபோது 98 கிலோ எடையுள்ள கஞ்சா பார்சல்களையும், 950 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்களை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக 3 நபர்களை கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். இரண்டு நாட்களில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சமையல் மஞ்சளின் இலங்கை மதிப்பு ரூ.3 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினர் அதிகளவில் கடத்தல் பொருட்கள் கைப்பற்றிய சம்பவம் குறித்து மத்திய, மாநில புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மண்டபம் பகுதியில் 2 டன் மஞ்சள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மண்டபம் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கடலில் இருந்து கரைப்பகுதியை நோக்கி நாட்டுப்படகு ஒன்று வந்ததும், படகையை நோக்கி போலீசார் சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்த கும்பல், படகை கரையில் நிறுத்தி விட்டு தப்பியது. தார்ப்பாயினால் மூடியிருந்த படகை சோதனையிட்டதில் உள்ளே மொத்தம் 2 டன் எடையுள்ள 73 மஞ்சள் மூட்டைகள் இருந்தன. மஞ்சள் மூட்டைகளுடன் இலங்கைக்கு படகு புறப்பட்டு சென்ற நிலையில் வழியில் இயந்திரம் பழுதானதால் பழுதை நீக்கி செல்வதற்காக கடத்தல்காரர்கள் மீண்டும் படகை கரைக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடத்தல் மஞ்சளை படகுடன் கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், மஞ்சள் மூட்டைகளையும் நாட்டுப் படகையும் மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி சென்றவர்களை தேடி வரும் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மஞ்சள் மூட்டைகளுடன் கைப்பற்றப்பட்ட படகு தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தது என்று கூறப்படுவதால், ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Sri Lanka ,Tamil Nadu , Drug, seizure
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...