×

இலங்கை கடற்படை அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது? சரமாரியாக கற்களை வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பீர் பாட்டில்களை வீசி தாக்கிய சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் இலங்கை கடற்படையினர் மீண்டும் ஒரு அட்டகாசத்தை அரங்கேற்றியுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை துரத்திச் சென்று கற்களை சரமாரியாக வீசி தாக்கினர். தொடர்ந்து 2 மணிநேரத்திற்கும் மேலாக இலங்கை கடற்படையினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் வேறு பகுதிகளுக்கு சென்ற மீனவர்கள் சரியான மீன்பாடு இல்லாமல், நேற்று காலை மிகக்குறைந்த மீன்பாடுடன் கரை திரும்பினர்.

மீனவர்கள் கூறுகையில், ‘‘பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்துவது, மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் கற்களையும், பீர் பாட்டில்களை வீசியும் தாக்கியதில் தங்கச்சிமடம் மீனவர் பலத்த காயமடைந்தார். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை வழிமறித்து விரட்டுவதற்காகவே, கடல் எல்லைப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களை நிறுத்தி இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். படகு உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களால் மீனவர்கள் போதிய அளவுக்கு மீன்பிடிக்க முடியாமல் திரும்புவதால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது’’ என்றனர்.

Tags : Sri Lankan ,Fishermen , Rameswaram, fishermen
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!