×

ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை கடத்திய 4 தமிழர்கள் தீயில் கருகி உயிரிழப்பு: டேங்கர் லாரி மீது மோதி கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் சோகம்!!

திருமலை, ஆந்திராவில் இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது 2கார்கள் அடுத்தடுத்து மோதியது. இதில் 3வாகனங்களும் தீப்பிடித்து கருகியது. இந்த கோர விபத்தில் 4 பேர் உடல் கருகி இறந்தனர். சேலத்தைச் சேர்ந்த இவர்கள் செம்மரக்கட்டை கடத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது. செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் வனப்பகுதியில் ரோந்து செல்வதோடு பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் கடப்பா-தாடிபத்திரி சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது கோட்டூர்-தோல்லகண்ணேபள்ளி இடையே 2 கார்கள் அதிவேகமாக சென்றது. இதில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று மற்றொரு கார் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறிய 2கார்களும் அவ்வழியாக வந்த டிப்பர் லாரியின் டீசல் டேங்கர் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் தீப்பிடித்தது. தொடர்ந்து லாரி மற்றும் 2 கார்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இதைபார்த்த போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் 2 கார்களில் இருந்த 4பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர். லாரி தீப்பிடித்தவுடன் லாரி டிரைவர் கீழே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பலியான 4பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான 2 கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்காமல் இருக்க கார்களை வேகமாக ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கியதும், பலியான 4பேரும், படுகாயம் அடைந்த 3பேரும் சேலத்தை சேர்ந்த கூலிதொழிலாளிகள் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் சேலத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பெயர்கள் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tamils ,Andhra Pradesh , Andhra, sheepskin, Tamils, casualties
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!